Breaking News

கடலூர்:15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் ஆசிரியர்கள் பேரணி:

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் பேரணி- ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேரணி
தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 6-வது ஊதியக்குழுவில் மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ள அனைத்து படிகளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். அகவிலைப்படி 100 சதவீத அளவை கடந்து விட்டதால் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி- ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் (ஜேக்டோ) அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று கடலூரில் பேரணி நடத்துவதற்காக தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவை சேர்ந்த ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் உழவர் சந்தை முன்பு ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் உழவர் சந்தையில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். பேரணி கடலூர் அண்ணா பாலம், பாரதிசாலை வழியாக சென்று கலெக்டர் அலுவலகம் எதிரில் முடிவடைந்தது.
ஆர்ப்பாட்டம்
முன்னதாக பேரணியில் கலந்து கொண்ட ஆசிரிய, ஆசிரியைகள், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாணவர்களுக்கு விலையில்லா பொருட்களை வழங்குவதற்காக தமிழக அரசு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வை நீக்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் பேரணியாக சென்றனர்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஜேக்டோ அமைப்பு மாவட்ட அமைப்பாளர் எல்லப்பன் தலைமை தாங்கினார். ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக உயர்மட்டக்குழுவை சேர்ந்த மணிவாசகன், முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவை (ஜேக்டோ) சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.