Breaking News

TNTET-2013: இணையத்தில் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு டிஆர்பி தேர்ச்சிசான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இணையதளத்தில் தேர்ச்சிசான்றிதழை பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்யாதவர்களுக்கு இம்மாத இறுதியில் சான்றிதழ் வழங்க டிஆர்பி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் என அரசு அறிவித்தது. 

இதையடுத்து கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டில் டிஆர்பி சார்பில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. 2012ல் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவ ருக்கும் பணி வழங்கப்பட்டது.2013ம் ஆண்டில் 6.6 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். 2013 நவ.5ல் வெளியான தேர்வு முடிவில் 27 ஆயிரம் பேர், மீண்டும் ஜனவரி 10ம் தேதி விடைகளில் மாறுதல் செய்ததில் 2,300 பேர் தேர்ச்சி பெற்றனர்.மேலும் 43 ஆயிரம் பேர் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் தேர்வாகினர்.

2013 தகுதித்தேர்வில் தேர்ச்சியடைந்த (முதல் மற்றும் 2ம் தாள்) அனைவருக்கும் தேர்ச்சி சான்றிதழ், ஓராண்டு கழித்து கடந்த செப்டம்பரில் டிஆர்பி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.சில நாட்கள் மட்டுமே பதிவிறக்கம் செய்யும் வகையிலேயே சான்றிதழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.இதனால் தேர்ச்சி சான்றிதழை ஏராளமானோர் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. மீண்டும் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என தேர்ச்சி பெற்றவர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் சான்றிதழை பதிவிறக்கம் செய்யாதவர்களுக்காக, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக, இம்மாத இறுதியில் சான்றிதழ் வழங்க டிஆர்பிசார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இது குறித்து டிஆர்பி அலுவலர் ஒருவர் கூறுகையில், “இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு வழங்க தற்போது சான்றிதழ் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.இம்மாத இறுதியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சான்றிதழ் வழங்கப்பட்ட நாளில் இருந்து 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்” என்றார்.