Breaking News

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இனி ஆய்வேடுகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஏற்கப்படும்: நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா


 
  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கப்பட்ட ஆய்வேடுகளும், சமர்பிக்கப்படும் ஆய்வேடுகள் நகலெடுத்து பயன்படுத்தும் முயற்சியை தடுக்கும் வகையில், பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கப்படும் அனைத்து ஆய்வேடுகளும் சோத்சங்கா திட்டத்தின் மென்பொருள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஏற்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்துள்ளார்.
 
அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலத்தில் நிறுவனத்தகவல் தளத்தின் மூலம் பாடத்திட்டங்களும், வினாத்தாள்களும் ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது.  பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கப்படும் அனைத்து முனைவர் பட்ட ஆய்வேடுகளையும் மென்பொருளின் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பல்கலைக்கழகம் ஏற்கும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தகவல் மற்றும் நூலக இணையத்தின் புதிய சேவையாக சோத்சங்கா என்ற திட்டத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழக அரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா புதிய சோத்சங்கா திட்டத்தை வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக நூலகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பதிவாளர் முனைவர் ந.பஞ்சநதம், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி, வேளாண்புல முதல்வர் ஜே.வசந்தகுமார், கலைப்புல முதல்வர் ஆர்.ராஜேந்திரன், கல்விப்புல முதல்வர் என்.ஒ.நெல்லையப்பன், நிதிஅலுவலர் பி.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர் மற்றும் நூலக அறிவியல்துறை தலைவர் முனைவர் எம்.நாகராஜன் மற்றும் நூலக அலுவலர்கள் செய்திருந்தனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தது: இதுவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும், இனிமேல் சமர்பிக்கப்படும் ஆய்வுக்கட்டுரைகளும் சோத்சங்கா திட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் நம் நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களில் சமர்பிக்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வேடுகளை காணமுடியும். மேலும் ஆய்வுக்கட்டுரைகள் நகலெடுத்து அப்படியே பயன்படுத்தும் முயற்சியினை தடுக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் ஐதண்டிகேட் (ithendicate) என்ற மென்பொருள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.