Breaking News

200 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்


தமிழக அரசின் அரசாணைப்படி, பார்வையற்ற முதுநிலைப் பட்டதாரிகள் 200 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற பார்வையற்ற மாணவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கத் தலைவர் என். செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசாணை எண்.260-இல் குறிப்பிட்டுள்ளபடி, 200 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பார்வையற்ற பட்டதாரி மாணவர்களைப் பணியமர்த்த வேண்டும்.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் 550 பார்வையற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும்.

கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு "நெட்', மாநில அளவிலான தகுதித் தேர்வு "செட்' தேர்வுகளில் தகுதிபெற்ற 100 பார்வையற்ற பட்டதாரிகளுக்கு சிறப்பு நேர்காணல் நடத்தி உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் வழங்க வேண்டும்.

படித்து முடித்து வேலையில்லாத பார்வையற்ற மாணவர்களுக்கான உதவித் தொகையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். இதுதொடர்பாக நீதிமன்றம் தலையிட்டும், எங்களுடைய கோரிக்கைகள் இன்று வரை ஏற்கப்படவில்லை.

எனவே, இதுதொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் சங்க நிர்வாகிகளை உடனடியாக அழைத்து பேச்சு நடத்த வேண்டும். இல்லையெனில், மீண்டும் மார்ச் மாதத்தில் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.