Breaking News

ஈடுசெய்யும் தற்செயல் விடுப்பு அளிப்பதில் குளறுபடி. எழுத்துபூர்வ உத்தரவு வழங்க கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பொருளாளர் தொடக்கக்கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (எஸ்எஸ்ஏ) மூலம் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதில் 4500க்கும் மேற்பட்ட குறுவளமையங்களில் ஆண்டிற்கு 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இப்பயிற்சி நாட்கள் பணி நாட்களாக கணக்கில் கொள்ளப்பட்டது. கடந்த கல்வி ஆண்டுகளில் பள்ளி வேலை நாட்களை அந்தந்த மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களே தயாரித்து வந்தனர். 
இதில் ஆண்டிற்கு 210 பள்ளி வேலை நாட்களுடன் 10 குறுவளமைய பயிற்சி நாட்களையும் சேர்த்து 220 நாட்கள் பணி நாட்களாக கணக்கிடப்பட்டது. இம்முறை கடந்து கல்வியாண்டு வரை பின்பற்றப்பட்டது. 
தற்பொழுது மாநிலம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறை இயக்ககங்கள் மூலம் பள்ளி வேலை நாட்கள் அறிவிக்கப்படுகின்றன. இதில் பல்வேறு மாவட்டங்களில் குறுவளமைய பயிற்சி நாட்களை பணி நாட்களாகவோ அல்லது ஈடு செய்யும் தற்செயல் விடுப்பு நாட்களாகவோ வாய்மொழியாக அறிவித்து வருகின்றனர்.
ஈடு செய்யும் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிப்பது சம்பந்தமாக  மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள்  மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவாக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கின்றனர். ஆனால் எழுத்துப்பூர்வ உத்தரவிட மறுத்து வருகின்றனர். இதுபோன்ற வாய்மொழி உத்தரவின் கூறி கல்வி அலுவலர்கள்  ஆசிரியர்களிடேயே பெரும் குழப்பத்தையும்  ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் இது கல்வியாண்டின் இறுதிகட்ட நிலை என்பதால் பள்ளி வேலை நாட்களாக  கணக்கிடவும் முடியாது. உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் இது குறித்து தெளிவான முடிவை அறிவிக்காமல் உள்ளனர்.
இதனால் ஆசிரியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே குறுவளமையப் பயிற்சி நடைபெறும் அனைத்து நாட்களையும் ஈடு செய்யும் தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ள  அதிகாரப்பூர்வ உத்தரவினை தொடக்க கல்வி இயக்குனர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.