Breaking News

அங்கன்வாடி ஊழியர் தேர்வுக்கான தடை நீங்கியது: 3,000 இடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவு

அங்கன்வாடி ஊழியர் பணிக்கான, 17 ஆயிரம் காலியிடங்களை நிரப்பவிதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. 3,000 இடங்களை, காலியாக வைத்திருக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்கம் தரப்பில், தாக்கல் செய்த மனு: எங்கள் சங்க உறுப்பினர்களில், 3,000 பேர், மினி அங்கன்வாடியில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். எங்களுக்கு, பதவி உயர்வுக்கு வழியில்லை. தற்போது, பிரதான அங்கன்வாடிகளில், காலியாக உள்ள பணியாளர் பணியிடங்களை, நேரடி தேர்வு மூலம் நிரப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதான அங்கன்வாடிகளில், எங்களை நியமிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, பிரதான அங்கன்வாடி ஊழியர் பணியிடங்களை நிரப்ப, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், 'தற்போதைய நிலை தொடர வேண்டும்' என, கடந்த ஜனவரியில், இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இவ்வழக்கு, நீதிபதி சசிதரன் முன், விசாரணைக்கு வந்தது. சங்கம் சார்பில், வழக்கறிஞர் அஜய் கோஷ் ஆஜரானார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் ஆணையர் தரப்பில் செய்த பதில் மனுவில், 'காலியிடங்கள், 17,150ஐ நிரப்புவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த, தடை உத்தரவை நீக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில் ஆஜரான, சிறப்பு, 'பிளீடர்' சுப்பையா, வழக்கு விசாரணை முடியும் வரை, பிரதான அங்கன்வாடியில், 3,000 பணியிடங்களை காலியாக வைத்திருப்பதாகவும், மீதி இடங்களை நிரப்ப அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

வயது, வருமானம், இருப்பிட தொலைவு உள்ளிட்ட நிபந்தனைகளை தளர்த்தி, ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி சசிதரன்

பிறப்பித்த உத்தரவு: பிரதான அங்கன்வாடி ஊழியர்கள் பணியிடங்களில், 3,000 இடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். பிரதான அங்கன்வாடியில், காலியிடங்களுக்கான தேர்வில், மனுதாரர் சங்கத்தினரும் கலந்து கொள்ளலாம். கடந்த பிப்., 23ம் தேதிக்கு முன், அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை, கணக்கில் கொள்ள வேண்டும். இந்த வழக்கின், இறுதி விசாரணை, ஏப்ரல், 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார்