தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு கடந்த 19-ந்தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. நேற்று எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்று பகல் 12 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு முடிந்து வெளியே வந்த எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் கூறியதாவது:-
ஆங்கிலம் முதல் தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் பல, ஏற்கனவே கடந்த வருடங்களில் கேட்கப்பட்ட கேள்விகளே ஆகும். இந்த கேள்விகளை கொண்டு எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு பயிற்சி அளித்தனர். அதனால் எளிதாக இருந்தது.
ஆனால் அதே நேரத்தில் 19, 21, 22 ஆகிய 3 கேள்விகள் புத்தகத்தில் இல்லை. பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டுள்ளன. அந்த 3 கேள்விகளும் தலா 1 மதிப்பெண்ணுக்கு உரியது.
மேலும் 40-வது கேள்வி புத்தகத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல வினாத்தாளில் முதல் பக்கத்தில், ஒரே சொல்லுக்கு இணையான (சினானிம்ஸ்) சொல் கேட்டு ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதில் ஒரு மதிப்பெண்ணுக்கு உரியது பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து எடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.