பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது; வரும் 19ல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இத்தேர்வை நடத்துவது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், உடுமலையில் நடைபெற்றது.
கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு நடப்பதால், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர்.
பிளஸ் 2 தேர்வுக்கு இடையே, 10ம் வகுப்பு தேர்வும் நடக்க உள்ளது. எவ்வித குழப்பத்துக்கும் இடமளிக்காத வகையில், தேர்வு மையங்களில் 2 பொதுத்தேர்வுகளுக்கும், தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து பயன்படுத்த வேண்டும்.
பிளஸ் 2 தேர்வை போன்றே, இத்தேர்வுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பத்தாம் வகுப்பு தேர்வுக்கான கண்காணிப்பாளர், துறை அலுவலர் மற்றும் முதன்மை கண்காணிப்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது.