வாட்ஸ் அப் விவகாரத்தினால் கல்வித்துறையில் நடந்த பல்வேறு முறைகேடுகள் தற்போது வெளியாக தொடங்கி உள்ளன. தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களை இடம் மாற்றம் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
மேலும் அரசு பள்ளியில் ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி கொண்டு தனியார் பள்ளிகளில் அதிகாரப்பூர்வமற்ற பங்குதாரராக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயாராகி வருகிறது.
தேர்வு பணியில் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை கல்வி மற்றும் தேர்வு துறை எடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக கிருஷ்ணகிரியை சேர்ந்த மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் வாட்ஸ் அப் விவகாரத்தால் சஸ்பெண்டு ஆன ஓசூர் மாவட்ட கல்வி அதிகாரி வேதகன் தன்ராஜ் ஏற்கனவே வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொன்குமாரிடம் நேர்முக உதவியாளராக பணியாற்றினார். அப்போது அவர் மீது புகார் கூறப்பட்டதால் அவர் பெண்ணாகரம் அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டார். பதவி உயர்வு மூலம் ஓசூர் மாவட்ட கல்வி அதிகாரியாக பொறுப்பேற்ற வேதகன் தன்ராஜ் தற்போது வாட்ஸ்அப் விவகாரத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
ஓசூர் தனியார் பள்ளி தேர்வு மையத்திற்கு பறக்கும் படை அதிகாரியாக சென்ற பொன்குமாரே தற்போது வாட்ஸ்அப் விவகாரத்தை கண்டுபிடித்து வேதகன் தன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார்.
சஸ்பெண்டு செய்யப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தான் தனியார் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை தேர்வு கண்காணிப்பு பணிக்கு அனுப்பி உதவியாக இருப்பாராம்.
முதலில் அவர் சஸ்பெண்டு லிஸ்டில் இல்லை. சென்னையில் இருந்து வந்த உயர் அதிகாரி ஒருவரின் ஆலோசனையின் பேரில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் இந்த ஊழியர் தமிழ் முதல் தாளை எடுத்துச் சென்ற வணிகவியல் ஆசிரியையை பறக்கும் படை பணியில் ஈடுபடுத்தி உள்ளார். ஆனால் அந்த ஆசிரியை பிரச்சினை வரும் என்பதால் பறக்கும் படை பணிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்துவிட்டார். மேலும் சஸ்பெண்டு ஆன அந்த ஊழியர் ரூ. 1 கோடிக்கு வீடு கட்டியுள்ளாராம். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.