ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி “ஜாக்டா,ஜாக்டோ ,ஜாக்கோட்டோ”, போன்ற பெயர்களில் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஏப்ரல், 19ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த, 'ஜாக்டோ' முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், ஜாக்டோவுக்கு போட்டியாக, 'ஜாக்டா' குழு சார்பில், ஏப்ரல், 12ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு சார்பில், கடந்த, 8ம் தேதி பேரணி நடந்தது. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ சார்பில் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாக்டோவின் உயர்மட்டக் குழுக் கூட்டம், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் சுரேஷ் தலைமையில், நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. முடிவில், ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் முழுவதும், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 18 ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, ஜாக்டா சார்பில் ஆலோசனைக் கூட்டம், அதன் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் தலைமையில், சென்னை யில் நேற்று நடந்தது.
இக்கூட்ட முடிவில், ஏப்ரல், 12ம் தேதி சென்னையில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மதிப்பெண் போடுவதில் ஆசிரியர்கள் குழப்பம் :தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர், சுரேஷ் கூறியதாவது:விடைத்தாள் திருத்த மையங்களில், பல இடங்களின் மேஜை, ஆண், பெண் ஆசிரியர்களுக்கு தனி, தனி கழிப்பறை வசதி இல்லை; மின் விசிறி, குடிநீர்ப் பிரச்னையும் உள்ளது.
இதையெல்லாம் ஆசிரியர்கள் சமாளித்தாலும், அதிகாரிகள் திடீரென மையங்களுக்கு வந்து, ஆசிரியர்களை மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். மதிப்பெண் தருவதில் பிரச்னை என்றால், பதவி உயர்வு, ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என்கின்றனர். இன்னொரு புறம், கடந்த ஆண்டை விட தேர்ச்சி அதிகரிக்க வேண்டுமென்றும், உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இதனால், சரியான மதிப்பெண் போடுவதா, வேண்டாமா என்பதில், ஆசிரியர்களுக்கு அச்சமும், பதற்றமும் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு? :தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர், ஏ.ஆர்.பாலகிருஷ்ணன் கூறியதாவது:விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, கடந்த ஆறு ஆண்டுகளாக ஊதியம் உயர்த்தப்படவில்லை. ஆண்டு தோறும், அகவிலைப்படி உயர்த்தப்படும் நிலையில், விடைத்தாள் திருத்த ஊதியம் மற்றும் போக்குவரத்துப் படி மட்டும் அப்படியே உள்ளது. தற்போது, ஒரு பிளஸ் 2 விடைத்தாளுக்கு, 7.50 ரூபாய் வழங்குகின்றனர். இதை, 15 ரூபாயாக உயர்த்தக் கோரி, தேர்வுத் துறைக்கும், அரசுக்கும் பலமுறை மனு கொடுத்து விட்டோம். ஊதியம் உயர்த்த தேர்வுத் துறை தயாராக இருந்தும், அரசு ஒப்புதல் கிடைக்கவில்லை.
எனவே, ஊதிய உயர்வு மற்றும் அடிப்படை வசதிகள் கோரி, தமிழகம் முழுவதும், 73 விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஒருநாள் புறக்கணிப்புப் போராட்டம் நடத்த, செயற்குழு முடிவு செய்துள்ளது. இதனால், விடைத்தாள் திருத்தும் பணியில் காலதாமதம் ஏற்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
-தினமலர்-
-தினமலர்-