Breaking News

நாகையில் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைபள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் காந்தி வரவேற்றார்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பரமசிவம், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவணன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் புகழேந்தி, இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் சித்ரா கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
கோரிக்கைகள்
மேற்கு வங்காளத்தில் பெண் ஆசிரியர்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மத்திய மாநில அரசுகள் ஆசிரியர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வி உரிமை சட்டத்தின் அனைத்து பிரிவுகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆரம்ப பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பும் கல்வியை இலவசமாக அளித்திட வேண்டும். மேலும் தாய்மொழி வழிக்கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் குமார் நன்றி கூறினார்.