ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுகீட்டை ரத்து செய்யக் கோரித் தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் சார்பில், பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது.
இதனையடுத்து, 2 வாரம் கால அவகாசம் அளித்து வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால், தகுதிவாய்ந்தவர்கள், தகுதியிழப்புச் செய்யப்படுவதாகவும், எனவே, அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, லாவண்யா உள்ளிட்ட பட்டதாரிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் பதிலளிக்குமாறு ஏற்கனவே, தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.