Breaking News

விடைத்தாள் திருத்தும் பணி: இன்று ஒரு மணி நேரம் புறக்கணிப்பு


தஞ்சாவூர்: 'தேர்வறைகளில் மாணவர்கள் செய்யும் தவறுக்கு, அறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை ரத்து செய்யக் கோரி, இன்று, ஒரு மணி நேரம் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிக்கப்படும்' என, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், தஞ்சை மாவட்ட தலைவர் ஜோதிமணி தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:




தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வறைகளில் மாணவர்கள் செய்யும் தவறுக்கு, தேர்வறை கண்காணிப்பாளர்களாக உள்ள ஆசிரியர்கள், பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். தேர்வுத் துறை இயக்குனரகத்தின் இந்த உத்தரவு, தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை அச்சமடைய செய்துள்ளது. தேர்வு துவங்கும் முன், மாணவர்கள் தேர்வறைக்குள் கடைபிடிக்க வேண்டிய விதிகளை, அறிவுரையாக மட்டுமே சொல்ல வேண்டும் என, விதியுள்ளது. மாணவ, மாணவியரை உடல்ரீதியாக சோதனை செய்யக் கூடாது என்றும் விதியுள்ளது. எனவே, மாணவர்கள் ஆடைக்குள் மறைத்து வைத்துள்ள காகிதங்களை சோதித்து எடுப்பது இயலாத காரியம். இந்நிலையில், பறக்கும்படை மற்றும் உயரதிகாரிகள் வரும் போது, அறைக்குள் மாணவர்கள் செய்யும் தவறுக்கு, தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வது, நீதிக்கு புறம்பானது. பறக்கும் படையினரும், உயரதிகாரிகளும் தேர்வறைக்கு வந்து சென்ற பின், அறை கண்காணிப்பாளரிடம், மாணவர் பிட் பேப்பர் வைத்து பிடிபட்டால், பறக்கும் படையினரும், உயரதிகாரிகளும் பொறுப்பேற்பார்களா என, ஆசிரியர்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. எனவே, ஆசிரியர் பணியிடை நீக்கம் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், இனிவரும் காலங்களில், தேர்வு பணியில் ஈடுபடுவது பற்றி, ஆசிரியர்கள் பரிசீலனை செய்ய நேரிடும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, முதற்கட்டமாக, இன்று பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஒரு மணி நேரம், விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும். இந்த உத்தரவை திரும்ப பெறாவிட்டால், தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.