பிளஸ்-2 கணித தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பத்துக்கு அரசு தேர்வுகள்இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார்.
கணிதம்
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 5-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ-மாணவிகள் எழுதி வருகிறார்கள்.பிளஸ்-2 தேர்வுகள் இம்மாதம் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று கணிதம் மற்றும் விலங்கியல் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன.
10 மதிப்பெண் பிரிவில் 58-வது வினாவில் கழித்தல் குறியீடு போடுவதற்கு பதிலாக கூட்டல் குறியீடு போடப்பட்டுள்ளது. புத்தகத்தில் இதே வினா கழித்தல் குறியீடுடன் உள்ளது.
வினாத்தாளை பார்த்ததும் 58-வது கேள்வி தவறாக அச்சிடப்பட்டுள்ளதோ என்று நினைக்க தோன்றியது. பிளஸ் போட்டு விடை அளிக்கலாமா? அல்லது மைனஸ் போட்டு விடை அளிக்கலாமா? என்று குழப்பமாக இருந்தது. சில மாணவர்கள் கேள்வியில் கேட்கப்பட்டபடி பிளஸ் போட்டு விடை அளித்துள்ளனர். சிலர் மைனஸ் போட்டு விடை அளித்துள்ளனர். எது சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட குழப்பமான கேள்விகளுக்கு விடை அளிக்க முயற்சி செய்தால் முழு மதிப்பெண் அளிக்க வேண்டும்.
இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இது குறித்து கணித ஆசிரியர் கூறும்போது, இந்த கேள்வி முழுக்க முழுக்க சரியானதுதான். கணிதத்தை மனப்பாடம் செய்து எழுதும் மாணவர்களுக்கு இந்த கேள்வி குழப்பமாக இருக்கலாம். ஆனால் புரிந்து படித்த மாணவர்களுக்கு இது மிக எளிதானதாகும் என்று தெரிவித்தார்.
தேர்வு துறை
அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜனிடம் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முயற்சி செய்தால் முழு மதிப்பெண் அளிக்கப்படுமா? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
பிளஸ்-2 கணித தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சரியானதுதான். குறிப்பாக பிரச்சினை கிளப்பிய 58-வது கேள்வி குறித்து நாங்கள் பல கணித ஆசிரியர்களிடம் கேட்டுள்ளோம். அவர்கள் அனைவரும் சரியானதுதான் என்று கூறுகிறார்கள். மைனஸ் போட்டும் கேள்வி கேட்கலாம், பிளஸ் போட்டும் கேள்வி கேட்கலாம். எனவே இந்த கேள்வி சரியானதுதான். கருணை அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்படும்,இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்தார்.