பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சரை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க தலைவர் எம்.ராஜா, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில தலைவர் ரவிசந்தர் மற்றும் நிர்வாகிகள், நேற்று தலைமை செயலகம் வந்து பள்ளி கல்வி துறை அமைச்சர் வீரமணியை சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான அரசு விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது, ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டு 6 மாதம் ஆகியும் இதுவரை ரூ.2 ஆயிரம் வழங்கப்படவில்லை. இந்த சம்பள உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 7,569 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர் நிலை-2 பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். 53,640 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை 100 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற எண்ணிக்கை அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்துள்ளோம் என்றனர்.