சாத்துார்:- உலகளவில் ஆண் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது,”என, ஐ.நா., சபையில் நடந்த பெண்களின் நிலை குறித்த கருத்தரங்கில் பேசிய சாத்துார் பள்ளி ஆசிரியை ரமாதேவி தெரிவித்தார். விருதுநகர், சாத்துார் ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஆர்.ரமாதேவி. அ.ராமலிங்காபுரம் ஊராட்சி பள்ளியில் பணிபுரிகிறார். ஐ.நா., சபையில் நடந்த 'பெண்களின் நிலை' குறித்த கருத்தரங்கில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பேசினார்.நேற்று மாலை ஊர் திரும்பிய அவர் கூறியதாவது:
உலக மகளிர்தினத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் 20 தேதி வரை ஜ.நா., சபையில் பெண்களுக்கான கருத்தரங்கம் நடந்து வருகிறது. உலகளவில் பெண்களின் உரிமைகளுக்காக போராடும் தன்னார்வ அமைப்பு உறுப்பினர்களில் எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் பேச அழைத்தனர். ஆசிய கண்டத்தில் இருந்து சென்ற ஒரே பெண் ஆசிரியை நான்தான்.
ஆண் பெண் சமத்துவம், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், இடம்பெயர்தல் ஆகிய மூன்று தலைப்புகளில் பேசினேன். உலகளவில் ஆண் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் இதே நிலைதான். இந்தியாவில் பெண்கள் என்னதான் படித்து, வேலைக்கு சென்று அதிக சம்பளம் பெற்றாலும் ஆணுக்கு ஒருபடி கீழாகவே நடத்தப்படுகிறார்கள்.
பெண்களின் உரிமைகளை காப்பதில் இந்தியாவின் பிற மாநிலங்களை விட தமிழகம் சற்று முன்னேறிய நிலையில் உள்ளது.2006ல் மலேசியாவில் நடந்த பெண்களுக்கான கருத்தரங்கில் முதல் முறையாக பேசினேன். சிங்கப்பூர், இலங்கை, நேபாளம், சுவீடனிலும் பேசி உள்ளேன். கடந்த 20 ஆண்டாக பெண்களின் உரிமைகளுக்கான கருத்தரங்கம், பயிற்சி பட்டறைகளில் பேசிவருகிறேன்.
பெண்களின் உரிமைகளுக்கான போராட்டங்களிலும் கலந்து கொண்டு மூன்று முறை சிறை சென்றுள்ளேன். ஜ.நா.,சபையில் எனது பேச்சின் எதிரொலியாக உலக கல்வி அமைப்பு இந்தியாவில் பெண்களின் உரிமைகளுக்காக உள்ள சட்டங்கள் குறித்து நுால் ஒன்று தொகுத்து வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திட நிதி உதவி அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பயணம் செய்து பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மனதில் உத்வேகம் ஏற்பட்டுள்ளது, என்றார். இவரை 94432 13755 என்ற எண்ணில் பாராட்டலாம்.