Breaking News

தேர்வு அறையில் நாற்காலிக்கு தடை


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், கடந்த ஆண்டை போல், தேர்வு அறையில் ஆசிரியர்களுக்கு நாற்காலிக்கு தடை விதிக்க, தேர்வுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பிளஸ் 2வுக்கு மார்ச், 4; மார்ச், 15ல் 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. தேர்வு அறையில் ஆசிரியர்களின் கண்காணிப்பு பணிகளில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஆசிரியர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து துாங்கி வழிந்து விடாமல் தடுக்க, அவர்களுக்கு நாற்காலி போட தடை விதிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு தான் இந்த திட்டம் அதிரடியாக அமலுக்கு வந்தது. 

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:ஆசிரியர்களுக்கு நாற்காலி வழங்கும் போது, அவர்கள் ஒரே இடத்தில் நாற்காலி போட்டு அமர்ந்து, தேர்வு நேரத்தில் கண்ணயர்ந்து விடுவதும், சற்று சுறுசுறுப்பு இழந்து விடுவதும் இயல்பானது. அந்த நேரத்தில், மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால், அதை ஆசிரியர்களால் கண்டுபிடிக்க இயலாது.
எனவே, தேர்வு நேரமான, மூன்று மணி நேரமும், தேர்வு அறையில் ஆசிரியர்கள் சுற்றி வரும் வகையில், நாற்காலிக்கு தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கு கடந்த ஆண்டே ஆசிரியர்கள் நல்ல ஆதரவு அளித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.