Breaking News

வேலைக்குவராத நாட்களுக்கு நோ ஒர்க்; நோ பே'


ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது' என, அரசு அதிரடி உத்தரவு
'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 68 சங்கங்களை உள்ளடக்கிய, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பிப்., 10 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறது.

நிதி அமைச்சர் தலைமையிலான, ஐந்து அமைச்சர்கள் இடம் பெற்ற குழு பேச்சு நடத்தி, 'விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, உறுதி அளித்தும், இடைக்கால பட்ஜெட்டில், கோரிக்கைகளை ஏற்கும் அறிவிப்பு வராததால், அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.அதனால், போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக, தமிழகம் முழுவதும் மறியல் செய்து, தினமும் பல ஆயிரம் பேர் கைதாகிவருகின்றனர். அரசு ஊழியர்களின் இந்தப் போராட்டத்தால், ஒன்பது நாட்களாக அரசுப்பணிகள் முடங்கிஉள்ளன. அரசுக்கான வரி வருவாயும் குறைந்துள்ளதால், அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.'நோ ஒர்க்; நோ பே' என்ற அடிப்படையில், அரசு ஊழியர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, பிப்., 10 முதல், அரசு அலுவலகங்களுக்கு வந்தவர்கள், வராதோர், விடுப்பில் உள்ளோர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவருகிறது.மாவட்டங்களில் இந்த விவரம் தொகுக்கப்பட்டு வரும் நிலையில், சம்பளத்தை பிடிப்பதற்கான சுற்றறிக்கை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.'வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது; பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்; சம்பள பட்டியலை கவனத்துடன் தயார் செய்து அனுப்ப வேண்டும்' என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போராட்ட நாட்களுக்கான சம்பளம் ரத்தாகிறது.

போராட்ட வியூகத்தை மாற்றிய அரசு ஊழியர்கள்:

போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வரும் அரசு ஊழியர்கள் பல ஆயிரம் பேருக்கும், சாப்பாடு தர முடியாமல் போலீசார் தவித்த நிலையில், நேற்று, அரசு ஊழியர்கள் போராட்ட வியூகத்தை மாற்றினர்.மாநிலம் முழுவதும், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருக்கும் போராட்டத்தை துவக்கினர். சென்னை, எழிலகத்தில், ஆயிரம் ஊழியர்கள் குவிந்தனர்; அங்கேயே சமைத்து, சாப்பிட்டனர்; இரவிலும் அங்கேயேதங்கினர். தமிழகம் முழுவதும், கலெக்டர் அலுவலகங்களிலும், ஊழியர்கள் இதுபோன்று காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது:வேலை நிறுத்த நாட்களுக்கு, 'நோ ஒர்க்; நோ பே' என்ற அடிப்படையில், சம்பளம் கிடைக்காது என்பது எங்களுக்கு நன்கு தெரியும். அனைத்தும் தெரிந்து தான் போராட்டத்தில் குதித்துள்ளோம். போராட்டத்தை ஒடுக்க, அரசு எந்த முயற்சியை மேற்கொண்டாலும் எடுபடாது; கோரிக்கைகளை ஏற்று, அரசு ஆணைகள் தரும் வரை போராட்டம் ஓயாது.இவ்வாறு அவர் கூறினார்.