Breaking News

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஹால்டிக்கெட்: பிப்., 20 முதல் பதிவிறக்கம் செய்ய உத்தரவு


பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட், தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம், வருகை பதிவேடு உள்ளிட்ட அனைத்தும், ஆன்லைன் வழியாக, பதிவிறக்கம் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச், 4ம் தேதி முதல், பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
இவர்களுக்கான விண்ணப்பங்களை பெற்றது முதல், பெயர் பட்டியல் திருத்தம் வரை, அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலமாகவே நடந்தது. தற்போது, மாணவர்களுக்கு தேவையான ஹால்டிக்கெட், வருகை பதிவேடு, தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம் ஆகியவற்றை, தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள், தங்களது யூசர் ஐ.டி., வழியாக பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிப்ரவரி, 12ம் தேதி முதல், 16ம் தேதி வரை, மையம் வாரியாக தேர்வர்களின் பெயர் பட்டியல், தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம், விடைத்தாள் முகப்பு சீட்டு ஆகியவற்றை டவுண்லோடு செய்யவும், பிப்ரவரி 17 முதல், 20 வரை வருகை பதிவேடும், பிப்ரவரி, 20 முதல், 26ம் தேதி வரை, மாணவ, மாணவியரின் ஹால் டிக்கெட்டுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.