Breaking News

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் தாக்கல்:


தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.தற்போதைய அ.தி.மு.க. அரசின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது. எனவே அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

நாளை பகல் 11 மணிக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தேர்தலை எதிர்கொள்ள வேண்டியதிருப்பதால் சில முக்கிய அறிவிப்புகளை இடைக்கால பட்ஜெட்டில் அ.தி.மு.க. அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்று நாளை காலை சபாநாயகர் தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அனேகமாக இந்த வாரம் முழுவதும் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து விட்டதால் அனைத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது.சட்டசபை கூட்டத்தில் மதுவிலக்கு, அரசுஊழியர் போராட்டம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பதி.மு.க.வும், தே.மு.தி.க.வும் திட்டமிட்டுள்ளன. மது விலக்கை அறிவிக்க இரு கட்சிகளும் இந்த கூட்டத்தொடரில் வலியுறுத்தக்கூடும்.
அரசு ஊழியர்களை சமரசம் செய்யும் வகையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் நீடிக்குமா என்பது நாளை தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட்டை பொருத்தே அமையும்.எனவே நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் அனைத்துத் தரப்பினரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.