Breaking News

இணைய சமநிலை அறிக்கை வெளியானது!

மத்திய தொலைத் தொடர்பு துறை அமைத்த குழு, இணைய சமநிலை தொடர்பான அறிக்கையை, தனது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. இதில் இணைய சமநிலையை காக்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இணைய சமநிலை: இன்டர்நெட் பயன்பாட்டில் எந்தவொரு வெப்சைட்டுக்கும், அப்ளிகேஷனுக்கும் கூடுதலாக கட்டணம் இல்லாமல், அனைத்து சேவைகளையும் ஒரே கட்டணத்தில் பெறுவதே இணைய சமநிலை.


எதிர்ப்பு: வாட்ஸ்அப், பேஸ்புக், ஸ்கைப் போன்ற சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் டிராயிடம் முறையிட்டன. இதனால் அக்குறிப்பிட்ட பக்கங்களை பார்க்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டியது வரும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இணைய ஆர்வலர்கள், போராட்டத்தில் குதித்தனர்.

6 பேர் கொண்ட குழு: இதனையடுத்து, மத்திய தொலைதொடர்புத்துறை ஆலோசகர் ஏ.கே.பார்கவா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. பல்வேறு ஆய்வுக்குப்பின், அக்குழு தனது இறுதி அறிக்கையை, தொலைதொடர்புத்துறை வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. அதில் இணைய சமநிலை கொள்கையை கடைபிடிக்க உறுதியளித்துள்ளது.

சாராம்சம்: குறைந்த விலையில் தரமான பிராட்பேன்ட் வசதி கிடைக்க வேண்டும்; இணைய சமநிலைக்கு எதிரான ஆர்.ஜி.ஓ., திட்டத்தை யாரும் ஊக்குவிக்கக் கூடாது; "ஏர்டெல் ஜீரோ' திட்டம் டிராய் ஒப்புதலுடன் நடத்தப்பட வேண்டும்; ஸ்கைப், வாட்ஸ்அப் போன்ற இன்டர்நெட் வழி டெலிபோன் அழைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்; இவை தேசபாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்;

செல்போன் அழைப்பு கட்டணங்களும், இன்டர்நெட் வழி அழைப்பு கட்டணங்களும், ஒரே சீராக இருக்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் போன்ற முக்கிய சாராம்சங்கள் இதில் அடங்கியுள்ளன. மேலும் இந்த பரிந்துரைகள் மீது ஆக.,15 வரை கருத்து தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆதரவு: இணைய சமநிலை தொடர்பான இந்திய தொலை தொடர்புத்துறையின் பரிந்துரைகள், இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் எனக்கூறிய பேஸ்புக் நிறுவனம், தனது ஆதரவை தெரிவித்துள்ளது.