Breaking News

பள்ளிகளிலும் ஆதார் முகாம் -ஆதார் எண் இருந்தால்தான் ‘ஸ்காலர்ஷிப்

பள்ளி மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட ஆதார் எண் விவரங்களை பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்துக்கு சிஇஓ அலுவலகங்கள் மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி ஒரு புறம் தீவிரமாக நடந்து வந்தாலும், மறுபுறம் ஆதார் எடுக்காதவர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. பள்ளியிலிருந்தே இப்பணியை துவங்க திட்டமிட்டுள்ள அரசு, பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எத்தனை பேருக்கு ஆதார் அடையாள அட்டை உள்ளது என்பது தொடர்பாக கணக்கெடுக்கவும், ஆதார் எண் இல்லாதவர்களை விரைவில் ஆதார் எண் எடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளன.
அதன்படி இனி வரும் காலங்களில் ஆதார் எண் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே ஸ்காலர்ஷிப் (கல்வி உதவித்தொகை) வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரியவருகிறது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களிடம் எத்தனை பேரிடம் ஆதார் அடையாள அட்டை எண் உள்ளது, எத்தனை பேருக்கு இல்லை என்ற விவரங்களை உடனடியாக சேகரித்து அனுப்பும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் ஆதார் எண் உள்ள மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆதார் எண் இல்லாத மாணவர்களை விரைவில் ஆதார் எண் எடுக்கும்படி கூறி வலியுறுத்தப்படுகின்றனர். இதுவரை கிடைத்த விவரங்களை இன்று பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இப்பணிகளில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் தீவிரமாக உள்ளனர்.

பள்ளிகளிலும் ஆதார் முகாம்

மாணவர்களிடம் ஆதார் எண் கேட்பதால் பெற்றோர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இல்லாத மாணவர்கள் எடுக்க வேண்டும் என்பதால் அவர்களை அழைத்துக் கொண்டு இது ஒரு வேலையாக அலைய வேண்டுமே என பெற்றோர்கள் புலம்புகின்றனர். பெற்றோர்களின் அதிருப்தியை சமாளிக்க அனைத்து பள்ளிகளிலும் விரைவில் ஆதார் முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது