Breaking News

வன்முறை கூடங்களாகும் கல்வி கூடங்கள் !


கல்வி தரும் ஆலயமாக கருதப்பட்ட பள்ளிக்கூடங்கள் இப்போது வன்முறைக் கூடங்களாக மாறிவருவது மனதை பதறவைக்கிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒருகாலத்தில் இருந்த இணக்கமான உறவு இப்போது தலைகீழாக மாறிவிட்டதைத்தான் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. மாணவர்கள் ஆசிரியர்களை எதிரிகளாகத்தான் பார்க்கின்றனர். ஆசிரியர்களோடுதான் இப்படி என்றில்லை. சக மாணவர்களையும் வெறுக்கத்தான் செய்கின்றனர். பள்ளித் தோழர்கள் என்ற பதப்பிரயோகமே இல்லாமல் ஆகிவிடும் போலிருக்கிறது.
அந்த அளவுக்கு மாணவர்களுக்கு இடையே கடுமையான பகையும், வெறியும் அதன் தொடர்ச்சியாக படுகொலையும் பள்ளியிலேயே அரங்கேறிவரும் கொடூரம் நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வகுப்பறையில் வைத்து 8ம் வகுப்பு மாணவன் ஒருவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். கொலையை செய்தது அதே பள்ளியின் முன்னாள் மாணவன். பொறியியல் கல்லூரி முதல்வர் ஒருவர் அதே கல்லூரி மாணவர்களால் படுபயங்கரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் 11ம் வகுப்பு மாணவன் ஒருவன் அவனது வகுப்பு மாணவன் ஒருவனாலேயே அடித்துக் கொல்லப்பட்டதும் தமிழகத்தில்தான் நடந்திருக்கிறது. பள்ளிக்கூடங்கள் கொலைக்களமாக மாறிவரும் போக்கை உடனடியாக தடுக்காவிட்டால் படுமோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர் பயப்படுகின்றனர். பள்ளிக்கூடங்களுக்கு செல்ல மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களே அச்சப்படும் நிலை இப்போது உருவாகியிருக்கிறது.
சென்னை பள்ளி ஒன்றில், மாணவனை கண்டித்த உடற்கல்வி ஆசிரியரை, மாணவனின் தந்தை அடியாட்களை ஏவி உதைத்திருக்கிறார். தொழிலதிபரான அந்த தந்தை தனது செல்வாக்கை பயன்படுத்தி வழக்கில் சிக்காமல் தப்பியிருந்திருப்பார். ஆனால், அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் ஒன்றுதிரண்டு மறியல், போராட்டம் என நடத்தியதால், தொழிலதிபர் இப்போது சிக்கியிருக்கிறார். இதேபோல நேற்று ஒரு அரசு பள்ளியில் பெண் ஆசிரியர் ஒருவரை, மாணவனே கன்னத்தில் அறைந்திருக்கிறான். சென்னை மதுரவாயலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்து உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் எடுக்கும் ஆசிரியை, பிளஸ் 2 மாணவன் ஒருவனை கண்டித்ததால், அந்த மாணவன் ஆசிரியையை அறைந்து விட்டு ஓடிவிட்டான். மாணவன் அடித்த வேகத்தில் ஆசிரியையின் காது ஜவ்வு கிழிந்து ரத்தம் கொட்டியது. இப்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் உருவாக்கும் இயந்திரமாகத்தான் பள்ளிகள் இருக்கின்றன.
அன்பையும் பண்பையும் போதிக்கும் இடமாக அது இல்லை. பல்வேறு நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி மன உளைச்சலும் வெறியும் ஏறியிருக்கும் மாணவர்களை இனங்கண்டறிந்து அவர்களுக்கு தனியாக கவுன்சலிங் நடத்தப்பட வேண்டும். அரசியல் தலைவர்கள் கூறியதுபோல பள்ளிகளில் மறைந்துபோன நீதிபோதனை வகுப்புகளை ஏற்படுத்த வேண்டும். எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் பள்ளிகளில் நடந்துவரும் இந்த வன்முறை அரங¢கேற்றத்தை நிறுத்த அரசு உடனடியாக தகுந்த முயற்சிகளை எடுக்க வேண்டும்

எண்ணம்- Trs trichy