மதுரவாயல் மார்க்கெட் அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,200 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கடந்த 1ம் தேதி 12ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை லட்சுமி (38) என்ற ஆசிரியை நடத்தி கொண்டிருந்தார்.மாணவர்கள், கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்து அறையை விட்டு வெளியே செல்லும்போது, ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவன், மெயின் சுவிட்சை ஆப் செய்துவிட்டான்.
இதனால் அங்கிருந்த 20க்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் அணைந்து விட்டன. இதில் 2 கம்ப்யூட்டரில் பழுது ஏற்பட்டது. இது தொடர்பாக மாணவன் ராஜாவை லட்சுமி கண்டித்துள்ளார்.வகுப்பில் சக மாணவர்கள் முன்னிலையில் தன்னை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாணவன் ராஜா, ஆசிரியை லட்சுமியை கன்னத்தில் அறைந்துள்ளான். இதில் காயமடைந்த அவர் அலறி, மயங்கி கீழே விழுந்தார். இதனால் பயந்துபோன மாணவன் அங்கிருந்து தப்பியோடினான். ஆசிரியையின் காது ஜவ்வு கிழிந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இந்நிலையில், பள்ளி நிர்வாகம் சார்பில், மாணவன் ராஜா மீது நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை கமிட்டிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட மாணவன், கமிட்டியில் நேரில் சென்று விளக்கம் அளிக்கவில்லை. மேலும், அவனது பெற்றோர், ஆசிரியர்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளனர். இதனால், மாணவனை பள்ளியில் இருந்து நீக்க ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி உத்தரவிட்டது.இதையடுத்து மாணவனின் மாற்று சான்றிதழ் தபால் மூலம் நேற்று அவனது வீட்டுக்கு அனுப்பப்பட்டது.