Breaking News

கருணை அடிப்படையில் திருமணமான மகளுக்கும் வேலை தரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு


அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் இறந்துவிட்டால், கருணை அடிப்படையில் அவருக்கு ஆண் வாரிசு இல்லாவிட்டால், திருமணமான மகளுக்கும் வேலை தரவேண்டும். எனவே, இதற்கான அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரியைச் சேர்ந்த கோவிந்தமம்மாளின் தந்தை நொச்சிக்குட்டையில் உள்ள அரசு மலைவாழ் உறைவிடப்பள்ளியில் சத்துணவு தலைமை சமையல்காரராக பணியாற்றினார்.
பணிக்காலத்தில் அவர் 2013 ஜனவரி 18ல் மரணமடைந்தார். இதையடுத்து, தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி கோவிந்தம்மாள் சமூக நலத்துறைக்கு மனு அனுப்பினார். அந்த மனுவை சமூகநலத்துறை நிராகரித்தது. கருணை அடிப்படையில் திருமணமான மகளுக்கு தந்தையின் பணியை வழங்க முடியாது என்பதால் அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக சமூக நலத்துறை விளக்கம் அளித்தது.
இதை எதிர்த்தும் தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரியும் கோவிந்தம்மாள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரர் கோவிந்தம்மாளின் தந்தை மரணமடைந்ததையடுத்து தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி அவர் அனுப்பிய மனுவை சமூகநலத்துறை நிராகரித்துள்ளது. கோவிந்தம்மாளின் பெற்றோருக்கு அவர் மட்டுமே சட்டபூர்வ வாரிசு. ஆண் வாரிசு இல்லை. இந்நிலையில், கோவிந்தம்மாள்தான் அவரது தாயை இறுதி வரை கவனித்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தை மனுவில் குறிப்பிட்டிருந்தும் அவரது 3 மனுக்களை சமூக நலத்துறை நிராகரித்துள்ளது.
கருணை அடிப்படையில் பணி வழங்குவதற்கு விதிக்கப்பட்ட தடை 2006 பிப்ரவரியில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து மனு அனுப்பியும் அந்த மனு மீது உரிய நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை எடுக்கவில்லை. கோவை கிருஷ்ணவேணி வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் சட்டம் 2007ல் மகனுக்கும் மகளுக்கும் சரிசமமான இடத்தை (சலுகையை) தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பெற்றோரைக் காப்பதில் மகனுக்கு உள்ள அதே பொறுப்பு மகளுக்கும் உள்ளது. மகன் இல்லாத பட்சத்தில் மகள் இருந்தால் அந்த மகளை மகனாகவே கருத வேண்டும். இந்த அடிப்படையில் மகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். இதில் மகன், மகள் என்ற வேறுபாடு காட்டக்கூடாது.
இந்த வழக்கில் இறந்துபோன சத்துணவு தலைமை சமையல்காரருக்கு ஆண் வாரிசு இல்லை.
மகள் மட்டுமே உள்ளார். அவருக்கும் திருமணம் நடந்துவிட்டது. இந்நிலையில், விதவையான தாயை காப்பாற்றுவது மகளின் கடமை என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும். தற்போதுள்ள சமூகத்தில் மகளுக்கும் மகனுக்கும் சமமான பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது. இதை சமூகநலத்துறை கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, இந்த வழக்கில் சமூக நலத்துறை மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கோவிந்தம்மாளுக்கு 8 வாரத்தில் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். மேலும், கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான 2010 அரசாணையில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
மற்றொரு வழக்கு
இதேபோல், திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகாவில் கிராம உதவியாளராக பணியாற்றியவர் பணிக்காலத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, அவரது மகள் கவிதா தனக்கு கருணை அடிப்படையில் வேலை தர உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கையும் நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டு கவிதாவுக்கு 8 வாரங்களுக்குள் பணி வழங்க வேண்டும் என்று திருப்பூர் கலெக்டருக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த உத்தரவிலும் கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பான அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.