Breaking News

எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு நிதி

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணியை உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி மேற்கொள்ள வேண்டும் என்பது முக்கிய நோக்கம்.இதன்படி மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), நிர்மல் பாரத்
மற்றும் சி.எஸ்.ஆர்., (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி) முறையில் ஏர்போர்ட் மற்றும் என்.எல்.சி., நிர்வாகங்கள் பங்களிப்பிலும் அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு புதிய கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன.இந்நிலையில் அரசு பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாததால் கழிப்பறை பராமரிப்பு கேள்விக்குறியானது. 

இது அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதனால் அவற்றின் பராமரிப்பு பணிகளை உள்ளாட்சி நிர்வாகங்களிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக முதல் கட்டமாக ரூ.163 கோடி அத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் 100 சதவீதம் இப்பணி முடிந்துள்ளது. அரசு பள்ளிகளில் பதவி உயர்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் இடங்கள் ஆயிரக்கணக்கில் காலியாக உள்ளன. இதனால் இவற்றின் பராமரிப்பு பணி உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்றார்.

எஸ்.எஸ்.ஏ., பராமரிப்பு நிதி:

எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7500 வரை பள்ளி பராமரிப்பு நிதி வழங்கப்படும். இது கட்டடம், புதிய நாற்காலி வாங்குவது உள்ளிட்ட செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும். ஆனால் இந்தாண்டு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் கழிப்பறை பராமரிப்புக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.