அரசு தொடக்கப்பள்ளிகளில், கடந்த கல்வியாண்டை காட்டிலும், 20 சதவீதம்
வரை, மாணவர் சேர்க்கை சரிவடைந்துள்ளது. கடந்த கல்வியாண்டில் துவக்கப்பட்ட
ஆங்கிலவழிக் கல்வி மீதும் பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டதால்,
கிராமப்புறங்களில் கூட, மாணவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
அனுமதி:தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஆண்டுக்காண்டு, மாணவர் எண்ணிக்கை
குறைந்து கொண்டே வருகிறது. நர்சரி பிரைமரி பள்ளிகளில், பெரும்பாலான
பெற்றோர், தங்கள் குழந்தைகளை சேர்ப்பதால், அரசு தொடக்கப்பள்ளிகளில், படிக்க
ஆள் இல்லாத சூழல் உருவாகி வருகிறது.
இதை தடுக்க, கடந்த கல்வியாண்டில், வாய்ப்புள்ள அனைத்து பள்ளிகளிலும்,
ஆங்கிலவழிக்கல்வி துவக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.ஆனால்,
ஆங்கிலவழிக்கல்விக்கென தனியாக ஆசிரியரோ, வகுப்பறையோ, பாடத்திட்டமோ
வகுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஓராண்டு ஆங்கிலவழிக்கல்வியில் படித்த
மாணவர்களிடம், பெற்றோர் எதிர்பார்த்த அளவுக்கு மாற்றமும் காணப்படவில்லை.
இதனால், அரசு பள்ளிகளில்,
ஆங்கிலவழிக்கல்வி மீதான நம்பிக்கையை பெற்றோர் இழக்க துவங்கியுள்ளனர்.
இதனால், நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை யில் பின்னடைவு
ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறை யின் போதே, அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்,
தங்கள் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளை கணக்கெடுத்து, பள்ளியில்
சேர்க்கஅறிவுறுத்தப்பட்டனர்.
தெருத்தெருவாக ஆசிரியர்கள், கேன்வாஸ் செய்ய அலைந்தும், முன்னேற்றம்
எதுவும் எட்டமுடிய வில்லை. நகர்பகுதிகளில் உள்ள பெரும்பாலான
துவக்கப்பள்ளிகளில், ஏற்கனவே ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை இருந்து
வரும் நிலையில், கிராமப்பகுதிகளிலும், அந்த நிலையை நோக்கி, அரசு
தொடக்கப்பள்ளிகள் சென்று வருகிறது.
ஒவ்வொரு தொடக்கப்பள்ளியிலும் கடந்த ஆண்டை காட்டிலும், 20 சதவிகிதம் வரை,
மாணவர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.கடந்த ஆண்டு எண்ணிக்கையில் வழங்கப்பட்ட
பை, புத்தகம், நோட்டு உள்ளிட்ட பொருட்கள், மாணவர் எண்ணிக்கை குறைவால்,
மீதமாகி, திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.
ஆதிக்கம்:இதுகுறித்து அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
கூறியதாவது:தமிழக அரசு ஆண்டுதோறும், சுயநிதி நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு
அனுமதி வழங்கி வருகிறது. போதிய வசதியில்லாத பள்ளிகளும் கூட, துணிவுடன்
செயல்படும் நிலை காணப்படுகிறது. நகர்ப்பகுதி களில், அதிகம் காணப்பட்ட
நர்சரி, பிரைமரி பள்ளிகள், தற்போது, கிராமப்பகுதிகளிலும், ஆதிக்கம் செலுத்த
தொடங்கியுள்ளது.அங்கு மாதாந்திர கட்டணம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி,
அங்குள்ள மாணவர்களை சேர்த்துவிடுகின்றனர்.
இதனால், கிராமப்பகுதிகளிலும், மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்துவிட்டது.
ஆங்கிலவழிக்கல்வி துவக்கிய ஆர்வத்தில், சேர்த்த பெற்றோர்களும் கூட,
தற்போது, 'டிசி' வாங்கி, தனியார் நர்சரிக்கு செல்ல தொடங்கிவிட்டனர்.தனியார்
பள்ளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், இதே
நிலை நீடிப்பதை தடுக்கவே முடியாது. இவை நீடிக்கும் பட்சத்தில், இன்னும் சில
ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் படிக்க ஆள் இல்லாத நிலை
உருவாகிவிடும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்