அரசு பள்ளிகளில் ஓவியம், தையல், உடற்கல்வி படிப்புகளுக்கான,
பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, பள்ளிக்கல்வித் துறையில், குழு
அமைக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஓவியம்,
தையல், இசை மற்றும் உடற்கல்வி படிப்புகளுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககம்
சார்பில், 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு,
பாடம் நடத்துவது குறித்து, சில ஆண்டுகளாக, எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை.
அத்துடன், பாடத்திட்ட விவரங்களையும் அளிக்கவில்லை. ஆனால், 2014ல்
உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தை பின்பற்றும்படி மட்டும், உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து, பாடத்திட்டம்
குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் கேட்டனர். 'பாடத்திட்டம்
எங்கே' என, அதிகாரிகளுக்கே தெரியவில்லை.இந்தப் பிரச்னை, கடந்த வாரம்
விஸ்வரூபம் எடுத்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், பாடத்திட்டம் குறித்து முடிவெடுக்க, பள்ளிக்கல்வித் துறை
கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
சார்பில், குழு அமைக்கப்பட்டுள்ளது.அதில், பள்ளி ஆசிரியர், கவின் கலைக்
கல்லுாரி ஆசிரியர் மற்றும் அதிகாரிகள் என, 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.
குழுவின் முதல் கூட்டம், நாளை முதல், 29ம் தேதி வரை, சென்னையில் நடக்கிறது.
அப்போது, ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்விக்கான பாடத்திட்டத்தை
புதிதாக உருவாக்குவதா அல்லது, 2007 மற்றும், 2014ல் உருவாக்கப்பட்ட
பாடத்திட்டத்தை தேடி அமல்படுத்துவதா என, முடிவு செய்யப்பட உள்ளது.