பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒளிவு மறைவற்ற பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும். அதற்காக கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று திமுக ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது(அரசாணை 232, 13.7.15). அதில் 15 வகையான வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் தியாகராஜன் கூறியதாவது: ஆசிரியர்கள் மீது பெறப்பட்டுள்ள புகார்கள் அடிப்படையில் அந்த ஆசிரியர்களுக்கு நிர்வாக அடிப்படையில் மாறுதல் முதலில் வழங்க வேண்டும். அந்த மாறுதல் அந்த ஆசிரியரின் விருப்பத்துக்கு ஏற்ப வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் டிரான்ஸ்பர் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் நியமனம் பெற்ற ஓராண்டுக்கு பிறகே கலந்து கொள்ள முடியும் என்று விதி இருந்தது. நேற்று வெளியிட்ட அரசாணையில் பணி நியமனம் பெற்று 3 ஆண்டுகள் கடந்தவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று விதியை திருத்தியுள்ளனர்.
கவுன்சலிங்குக்கு முன்பு மாணவர்களின் நலன் கருதியும், ஆசிரியர்களின் நலன் கருதியும், பள்ளியின் நலன் கருதியும் தேவையின் அடிப்படையில் நிர்வாக மாறுதல் வழங்க வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் டிரான்ஸ்பர் கவுன்சலிங்கை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்