சென்னை:
'வரையறுக்கப்பட்ட பாடத்திட்டமே இல்லாத நிலையில், வரையறுக்கப்பட்ட
பாடத்திட்டத்தை மட்டுமே, ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்' என, அனைவருக்கும்
கல்வி இயக்ககம், மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டிருப்பது, ஓவிய
ஆசிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அனைவருக்கும் கல்வி
இயக்ககம் சார்பில், மாநில திட்ட இயக்குனரின் சுற்றறிக்கை, சமீபத்தில்
அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது.அதில், 'ஓவியம், தையல், இசை,
கட்டடக்கலை, தோட்டக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவின் கீழ்
பணியாற்றும் ஆசிரியர்கள், வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தை, மாணவர்களுக்கு
கற்பிக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால்,
அரசு பள்ளிகளில் பணியாற்றும், நிரந்தர ஓவிய ஆசிரியர், பகுதி நேர ஓவிய
ஆசிரியருக்கு, வரையறுக்கப்பட்ட பாடத்திட்டம் என்ன என்பது தெரியவில்லை.
அவர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டால், 'உயர்
அதிகாரிகளிடம் கேட்டு வருகிறோம்; ஓவிய பாடத்திட்டம் எங்குள்ளது என, தேடி
வருகிறோம்' என, பதில் அளிக்கின்றனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் ராஜ்குமார், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
ஓவிய ஆசிரியர்களுக்கு, இதுவரை வரையறுக்கப்பட்ட பாடம் எது என, விவரம்
தெரிவிக்கவில்லை.பள்ளிக் கல்வித்துறை மூலம், அன்றைய விருதுநகர் மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் மூலம், முப்பருவ முறையுடன், தமிழக
அரசின் ஓவிய பாடத்திட்டத்திற்கு, கல்வி இணை செயல்பாடுகள், தர மதிப்பீடு
படிவம் உட்பட, அனைத்தும் தொகுக்கப்பட்டு, 2014 செப்டம்பர், 1ம் தேதி
வெளியிடப்பட்டது.அந்த பாடத்திட்டத்தில், விருதுநகர் மாவட்ட, மாணவர்கள்
மட்டும் பயன்பெறுகின்றனர்.மற்ற மாவட்டங்களில், பாடத்திட்டடம் என்ன எனத்
தெரியவில்லை. எனவே, முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுத்துள்ளோம்.
அந்த மனுவுடன், விருதுநகர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட, பாடத்திட்டத்தின் நகலை இணைத்துள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.