Breaking News

சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த, 118 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், கோவையைச் சேர்ந்த சாருஸ்ரீ, அகில இந்திய அளவில், ஆறாமிடம் பிடித்துள்ளார்.



ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த, 118 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், கோவையைச் சேர்ந்த சாருஸ்ரீ, அகில இந்திய அளவில், ஆறாமிடம் பிடித்துள்ளார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., 2014ல் நடத்திய, சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு, 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால், 4.51 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் பிரதான தேர்வு எழுத, 16 ஆயிரத்து, 933 பேர் தேர்வாகினர்; எழுதியவர்கள், 16 ஆயிரத்து, 286 பேர். இதன் முடிவுகள், கடந்த மார்ச்சில் வெளியிடப்பட்டன. நேர்முகத் தேர்வுக்கு, 3,308 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில், 1,236 பேர், சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிவில் சர்வீஸ் பதவிகளின் எண்ணிக்கை, 1,364 என்பதால், மீதம், 128 இடங்கள் உள்ளன. இதற்காக, 254 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.மேலும், சிவில் சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகளில், முதல் மூன்று இடங்களை பெண்களே பிடித்து சாதனை படைத்துள்ளனர். 


டில்லியைச் சேர்ந்த ஈரா சிங்கால், பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த ரேணு ராஜ், டில்லியின் நிதி குப்தா ஆகியோர், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.சாதனைப் பெண்களான ஈராவும், நிதி குப்தாவும், இந்திய வருவாய் துறையில், அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். இரண்டாமிடம் பிடித்த ரேணு ராஜ், கேரள மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். 


அதேநேரத்தில், நேற்று வெளியான தேர்வு முடிவு களில், அகில இந்திய அளவில், தமிழகத்தைச் சேர்ந்த சாருஸ்ரீ ஆறாவது இடம்; மெர்சி ரம்யா, 32வது இடம்; அருண்பிரசாத், 34வது இடம்; பிரசாந்த், 47வது இடத்தை பெற்று உள்ளனர். முதல், 150 இடங்களை பிடிப்பவர்கள், ஐ.ஏ.எஸ்., பதவிக்கு தேர்வு செய்யப்படுவர். மற்றவர்கள், ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பிற மத்திய அரசு பதவிகளுக்குஅனுப்பப்படுவர்.சிவில் தேர்வுகளில், தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த, 2012ல், 97 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், 2014ல், 118 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விருப்பம் நிறைவேறியது: மெர்சி ரம்யா:

''விரும்பியதை எட்டினேன். இனி, மக்கள் பணியாற்றுவேன்,'' என, சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழக அளவில், இரண்டாம் இடமும், தேசிய அளவில், 32வது இடமும் பெற்ற, மெர்சி ரம்யா, 27, கூறினார்.சென்னையைச் சேர்ந்த இவர், பி.இ., கணினி அறிவியல் பட்டதாரி. இவரது தந்தை ஐசக் சாமுவேல்; வழக்கறிஞர். தாய் பொன்முடி அருட்கொடி; ஓய்வுபெற்ற அரசு கல்லுாரி முதல்வர். தம்பி; பல் மருத்துவ மாணவர்.

தற்போது, ரயில்வே துறையில் புரபெஷனரி அதிகாரி பயிற்சியில் இருக்கும் மெர்சி ரம்யா கூறியதாவது:பி.இ., கணினி அறிவியல் படிப்பில் சேரும் போது, அத்துறையின் தேவை மிக அதிகமாக இருந்தது. உடனே வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படித்தேன். ஆனால், பி.இ., முடிக்கும்போது, சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என, திட்டமிட்டேன். இரண்டு முறை ஏற்கனவே, சிவில் சர்வீஸ் தேர்வுஎழுதியுள்ளேன்; இது, மூன்றாவது முறை. இதற்கிடையே, ரயில்வே புரபெஷனரி அதிகாரி தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சியில் உள்ளேன். சில ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் தேர்வுக்குதயாராகி வந்தேன். இத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற என் லட்சியத்தை இப்போது எட்டியுள்ளேன். இனி, மக்கள் பணியாற்றுவேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.

லட்சியம் நிறைவேறியது: சாருஸ்ரீ :

''மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேறியது,'' என, யு.பி.எஸ்.சி., தேர்வில், தேசிய அளவில், ஆறாம் இடம் பெற்றுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி சாருஸ்ரீ, 24, பெருமிதத்துடன் கூறினார். இவர், கடந்த ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று, இந்திய வனப் பணியான ஐ.எப்.எஸ்.,க்கு தேர்வானார். தற்போது, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில், பயிற்சி பெற்று வருகிறார்.நேற்று வெளியான, யு.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகளில், தேசிய அளவில், ஆறாம் இடத்தை பெற்றுள்ளார். 

டேராடூனில் இருந்த அவர் கூறியதாவது:என் சொந்த ஊர் கோவை. தந்தை எஸ்.தியாகராஜன், வேளாண் துறையில், செயற் பொறியாளராக பணிபுரிந்து, சமீபத்தில் ஓய்வு பெற்றார். 
பள்ளிப்படிப்பை கோவையில் முடித்த நான், 2012-ல், சென்னை அண்ணா பல்கலையில், 'எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன்' பிரிவில், பொறியியல் பட்டம் பெற்றேன். எனினும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. தற்போது, அந்த முயற்சிக்கு பலன் கிடைத்து
உள்ளது. இதன் மூலம், மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.