காலாண்டுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைத்தாள்களை கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டுத் தேர்வுகள் மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 19ல் துவங்கி 27ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 7ம் தேதி முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காலாண்டுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைத் தாள்களை கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வாயிலாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் விவரம்; "காலாண்டுத் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தங்கள் மேற்கொண்டு பள்ளிகள் திறப்பின் போது மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த குழுவினர் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கையை வழங்க வேண்டும். அதன் விவரங்களை மாவட்ட அளவில் தொகுத்து இயக்குநரகத்துக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.