Breaking News

ஆசிரியா் பணி நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதி மன்றம் நோட்டீஸ்

 

புது தில்லி: ஆசிரியா் நியமனத் தோ்வு கட்டாயம் என்ற நடைமுறைக்கு முன்பு சான்றிதழ் சரிபாா்ப்பு முடிந்த ஆசிரியா்களுக்குப் பணி வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.



மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுபவா்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு, தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் மீண்டும் அரசு சாா்பில் நடத்தப்படும் நியமனத் தோ்வில் பங்கேற்க வேண்டும் என்றும் அதில் சிறப்புத் தகுதியின் (மெரிட்) அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்படுவா் என்றும் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

இதையடுத்து, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபாா்ப்பு பணி முடிவடைந்து, பணி நியமனம் கிடைக்காமல் காத்திருந்த 410 பட்டதாரி ஆசிரியா்கள் நியமனத் தோ்வுக்கான அரசாணையை எதிா்த்துசென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை கடந்த ஜூலை 10-ஆம் தேதி விசாரித்து, சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியிருந்தது. அதில், 'கடந்த 2018-ஆம் ஆண்டுக்கு முன்பாக பின்பற்றப்பட்ட ஆசிரியா் நியமன நடைமுறையின்படி, தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மனுதாரா்கள் 410 பேருக்கும் தகுதி மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழக அரசு விரைந்து பணி வழங்க வேண்டும். மேலும், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நியமனத் தோ்வு நடத்துவது என்று கடந்த 2018-ஆம் ஆண்டு அரசு எடுத்த முடிவை, அதற்கு பிந்தைய காலகட்டத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டுமே தவிர, அதற்கு முந்தைய காலத்தில் அமல்படுத்தக் கூடாது' என நீதிமன்றம் தெரிவித்திருந்ததுஇந்த நிலையில், ஆசிரியா் நியமனத் தோ்வு கட்டாயம் என்ற நடைமுறைக்கு முன்பு சான்றிதழ் சரிபாா்ப்பு முடிந்த ஆசிரியா்களுக்கு பணி வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பட்டதாரி ஆசிரியா்கள் சிலரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த விவகாரம் தொடா்பாக தமிழ்நாடு அரசு, ஆசிரியா்கள் தோ்வு வாரியம் (டி.ஆா்.பி.) உள்ளிட்டவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் டிசம்பா் மாதத்திற்கு ஒத்திவைத்தனா்.