Breaking News

நிறுத்தி வைக்கப்பட்ட பயோமெட்ரிக் முறை பள்ளிகளில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பயோமெட்ரிக் முறை பள்ளிகளில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.




தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆனால், பள்ளிக்கு மாணவர்கள் குறித்த நேரத்தில் வந்தாலும் ஒரு சில ஆசிரியர்கள் தாமதமாக பணிக்கு வருவதும் முன்கூட்டியே புறப்பட்டு செல்வதும் வாடிக்கையாக இருந்து வந்தது.


இந்நிலையில் ஆசிரியர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் ஆசிரியர்கள் வருகை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. 2020-ம் ஆண்டு மார்ச் இறுதியில், கொரோனா பரவல் காரணமாக பயோமெட்ரி எந்திரம் மூலம் கொரோனா பரவும் என்பதால் பயோமெட்ரிக் முறையை தமிழக அரசு நிறுத்தி வைத்தது.


இந்நிலையில் ஆசிரியர்களுக்கு மீண்டும் விரல் ரேகை (Bio Metric) அடிப்படையிலான வருகைப்பதிவு முறையினை நடைமுறைப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகையான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவேடு மேற்கொள்ளும் வகையில் அனைத்து விவரங்களையும் தயார் செய்து அம்மாவட்டத்தை சார்ந்த கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் 3½ ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பயோமெட்ரிக் எந்திரங்கள் எத்தனை? அதில் எத்தனை இயங்குகின்றன? எத்தனை இயங்கவில்லை? என்ற விவரத்தையும் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது