தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி உள்பட அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் என 15,000 பேருக்கு செப்டம்பர் மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் சார்பில் பள்ளி கல்வித்துறைக்கு என்று தனித்தனியாக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (Samagra Shiksha Scheme) என்பது மத்திய அரசு, மாநில அரசின் பங்களிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மத்திய - மாநில அரசுகள் சேர்ந்து பள்ளி கல்வித்துறைக்கு ரூ.3,586 கோடியை வழங்க வேண்டும். இதில் மத்திய அரசு ரூ.2152 கோடி வழங்கும். மற்றவற்றை தமிழக அரசு பங்களிப்பு செய்யும்.
இந்நிலையில் தான் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டுக்கு மத்திய அரசு சார்பில் தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் ரூ.573 கோடி வழங்கப்பட வேண்டும். இந்த தொகை தற்போது நிறுத்திவைத்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கடிதம் எழுதினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 27 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து நிதியை விடுவிக்க கூறினார். ஆனாலும் மத்திய அரசு நிதியை வழங்கவில்லை. இதனால் தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் எஸ்எஸ்ஏ திட்டத்தில் பணியாற்றும் ஐஏஎஸ், அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் என 15,000 பேருக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று 1ம் தேதி என்றாலும் கூட தற்போது வரை அவர்களுக்கு செப்டம்பர் மாதம் சம்பளம் என்பது வழங்கப்படவில்லை. மத்திய அரசு நிதி விடுவிக்காமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தற்போது இந்தஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்றால் ரூ.25 கோடி நிதி வேண்டும்.
இத்தகைய சூழலில் தான் அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி 15,000 பேருக்கும் எப்போது செப்டம்பர் மாத ஊதியம் கிடைக்கும் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.