Breaking News

1941 முதல் 2050 வரை.. 110 ஆண்டுகளுக்கு தேதியை கூறினால் கிழமையை சொல்லும் மாற்றுத்திறன் மாணவி




தான் வாங்கிய விருது, சான்றிதழ்களுடன் பிரியங்கா.
110 ஆண்டுகளில் எந்த தேதியை கூறி கிழமை கேட்டாலும் 3 விநாடிகளில் பதில் சொல்லி அசர வைக்கிறார் திருச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவி பிரியங்கா.

திருச்சி தீரன் நகரைச் சேர்ந்தவர் கண்ணன். ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி பானு. தனியார் பள்ளியில் சிறப்புக் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் ‘கேர் டேக்கர்’ஆக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் பிரியங்கா(15). சிறுவயதிலேயே மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்.
மாறுகண், செயல்பாடில்லாத இடது கை, தெளிவில்லாத பேச்சு என மாற்றுத்திறன் சிறப்புக் குழந் தையான இவர், திருச்சி உறையூர் சிவானந்தா பாலால யாவில் தேசிய திறந்தவெளி பள்ளி(என்ஐஓஎஸ்) மூலம் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இவர், 1941-ம் ஆண்டு முதல் 2050-ம் ஆண்டு வரை 110 ஆண்டு களில் எந்த தேதியை சொன்னாலும் , அதற்குரிய கிழமையை அடுத்த 3 விநாடிகளில் சொல்லி அசர வைக்கிறார். அதேபோல, ஒரு குறிப்பிட்ட ஆண்டில், குறிப்பிட்ட மாதத்தில், ஒரே கிழமையில் வரும் தேதிகள் என்னென்ன, எந்தெந்த ஆண்டுகள் ஒரே மாதிரியான தேதி, கிழமைகளில் வருகின்றன என்பதையும் கூறுகிறார்.
உதாரண மாக, வரும் 2017-ம் ஆண்டுக்கு ரிய காலண்டரும், இதற்கு முன் இருந்த 1950, 1961, 1978, 1995, 2006, 2023, 2034, 2045 ஆகிய ஆண்டுகளுக்குரிய காலண்டரும் ஒரே மாதிரியான காலண்டர்களைக் கொண்டவை என்கிறார்.
பேச்சுப் பயிற்சி
இவருக்கு எப்படி இந்த அசாத் திய திறமை வந்தது என அவரது தாய் பானுவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
ஒரு வயதாகும்போதுதான், பிரியங்காவுக்கு ஏதோ குறை இருப்பதை உணர்ந்தோம். மருத்துவர்களிடம் காண்பித்த போதுதான், அவர் சிறப்புக் குழந்தை என்று தெரியவந்தது. இதனால் எங்களுக்கு மனவருத்தம் இருந்தாலும், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பிசியோ தெரபி, பேச்சுப் பயிற்சி அளித்து வந்தோம்.
புத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தோம். மேலும், ஒரு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ராஜாத்தி, வீட் டுக்கு வந்து காலண்டரை காட் டித்தான் எண்களைச் சொல்லித் தந்தார்.
அப்போது, எல்லா மாதங்களையும் பார்த்து மனப்பா டம் செய்துகொண்டதுடன் எந்த தேதியைச் சொன்னாலும் கிழ மையைச் சொல்லி அசத்தினார். தொடர்ந்து, 2011 முதல் 2014 வரை உள்ள காலண்டர்களை கொடுத்து பயிற்சி கொடுத்தோம்.
இவரது திறமையைப் பார்த்த, எங்களுக்குத் தெரிந்த ஒருவர் 1941 முதல் 2050 வரை உள்ள காலண்டர்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, புத்தகம்போல தைத்துக் கொடுத்தார்.
அதை ஒவ்வொரு பக்கமாக புரட்டிய பிரியங்கா, அனைத்தையும் கிரகித்துக்கொண்டார். அதன்பின், 110 ஆண்டுகளில் எந்த தேதியைச் சொன்னாலும், கிழமையை கூறினார். 1941-க்கு முன்பும், 2050-க்கு பின்பும் உள்ள தேதியை கேட் டாலும் கிழமை சொல்கிறார். ஆனால், அந்த ஆண்டுகளுக்கு ரிய காலண்டர் கிடைக்காததால் எங்களால் உறுதிப்படுத்த முடிய வில்லை என்றார் பானு.
விருது
பிரியங்காவின் தந்தை கண் ணன் கூறியபோது, “என் மகளின் திறமைக்காக மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில், கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தலைசிறந்தவர்களுக்கான விருது வழங்கும் விழாவில், பிரியங்கா வின் நினைவாற்றல் திறமையைப் பாராட்டி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கி கவுரவித்தார்.
உறையூர் சிவானந்தா பாலா லயாவில் தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு சேர்ந்துள்ளார். அதற்கு ரூ.26 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். போதிய நிதி வசதி இல்லாததால், அந்த கட்டணத்தைக்கூட இன்னும் செலுத்த முடியவில்லை. அரசு உதவி செய்தால் அது, என் மகளை ஊக்கப்படுத்துவதாக அமையும்” என்றார்.
“படித்து முடித்து, தன்னைப் போலவே உள்ள சிறப்புக் குழந்தைகளுக்கு கேர் டேக்கராக இருக்கவே ஆசைப்படுகிறேன்” என்கிறார் பிரியங்கா