புதுடெல்லி: எம்பிக்கள் சம்பளத்தை இருமடங்காக அதிகரிக்க வேண்டும்,
தினசரி படி, ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்த வேண்டும் என நாடாளுமன்ற
கூட்டுக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்ற
உறுப்பினரின் சம்பளம், பென்ஷன் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்ற
கூட்டுக்குழு ஆய்வு செய்தது. தற்போது வழங்கப்படும் சம்பளம்
உள்ளிட்டவைற்றில் பல்வேறு மாற்றங்களை செய்து, அதற்கான அறிக்கையை மத்திய
அரசிடம் இக்குழு சமர்ப்பித்துள்ளது.
ஒரு எம்பிக்கு மாதச் சம்பளமாக தற்போது ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது.
இதை இருமடங்காக உயர்த்த வேண்டும் என நாடாளுமன்ற கூட்டுக்குழு
தெரிவித்துள்ளது. இதன்மூலம் எம்பிக்கள் சம்பளம் ரூ.1 லட்சமாக உயரும்.
ஓய்வுபெற்ற எம்பி மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் பென்ஷன் வாங்கி வருகிறார். இதை
ரூ.35 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற
கூட்டத்தொடரின்போது ஒரு எம்பிக்கு தினசரி படியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு
வருகிறது.
இந்த தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். எம்பி மற்றும் அவரது மனைவி
ஆகியோர் ரயிலில் முதல் வகுப்பு ஏசியில் இலவசமாக பயணம் செய்து கொள்ளவும்,
எம்பியின் உதவியாளர் 2ம் வகுப்பு கட்டணத்தில் பயணம் செய்யவும் தற்போது
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதவியாளரும் எம்பியுடன் பயணம் மேற்கொள்ள
அனுமதிக்கலாம் என பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான பயணத்துக்கு வழங்கப்படும் படியை உயர்த்த வேண்டும், விமான
நிலையத்தில் எம்பிக்களுக்கு சில சலுகைகள் வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற
எம்பிக்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்க வேண்டும், மத்திய சுகாதார
திட்டத்தின்கீழ் எம்பிக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதியை, அவர்களது
குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
ஊதிய குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வாறு
சம்பளம் வழங்கப்பட்டு வருகிறதோ அதேபோன்ற நடைமுறையை, எம்பிக்கள் சம்பள
விஷயத்திலும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60
பரிந்துரைகளை நாடாளுமன்ற கூட்டுக்குழு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
எம்பிக்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில்,
எம்பிக்கள் வசிக்க அரசு குடியிருப்பு, ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட்
மின்சாரம், 4 ஆயிரம் கிலோ லிட்டர் தண்ணீர், 50 ஆயிரம் இலவச தொலைபேசி
அழைப்புகள் போன்றவற்றை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருவது
குறிப்பிடத்தக்கது.