ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில்
கட்டப்படும் பள்ளிகளுக்கு நகர் ஊரமைப்புத்துறையிடம் கட்டட அனுமதி பெற
நிர்பந்திக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி கோயன்விளை பாரத் அட்வான்ஸ்டு மெட்ரிக் பள்ளி தாளாளர் பகவத்
தாக்கல் செய்த மனு:
ராஜாக்கமங்கலம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட
பகுதியில் 3.25 ஏக்கரில் பள்ளி கட்டடம் கட்டினோம். இதற்காக பொது கட்டடம்
கட்ட ஊராட்சியில் உரிமம் பெற்றுள்ளோம்.
பள்ளிக்கு அங்கீகாரம் கோரி திருநெல்வேலி மண்டல
மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளரிடம் விண்ணப்பித்தேன். அவர், பள்ளி
கட்டடத்திற்கு நகர் ஊரமைப்புத்துறையிடம் அனுமதி பெறவில்லை, என
நிராகரித்தார். அதை ரத்து செய்து ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என
குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு: தமிழ்நாடு
பஞ்சாயத்து கட்டட விதிகள்படி, ஊராட்சித் தலைவருக்குத்தான் அனுமதி வழங்கும்
தகுந்த அதிகாரம் உள்ளது. அவர் அனுமதி வழங்குவதற்கு முன் நகர்
ஊரமைப்புத்துறை இணை அல்லது துணை இயக்குனரிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்.
ஊராட்சித் தலைவர், நகர் ஊரமைப்புத்துறை இடையே
உள்ள உள்விவகாரத்திற்கும் மனுதாரருக்கும் சம்பந்தமில்லை. ஊராட்சித் தலைவர்
மீது எந்த நடவடிக்கையும் நகர் ஊரமைப்புத்துறை எடுக்கவில்லை.இப்பள்ளி
ஊராட்சி எல்லையில் உள்ளது.
பள்ளிக் கல்வித்துறை ஆணைப்படி,நகர்
ஊரமைப்புத்துறை இணை அல்லது துணை இயக்குனரிடம் கட்டட ஒப்புதல் பெற வேண்டும்,
என வலியுறுத்தவில்லை. பள்ளி மீது எந்த தவறும் இல்லை.
மனுதாரர் பள்ளிக்கு நகர் ஊரமைப்புத்துறை இணை
அல்லது துணை இயக்குனரிடம் கட்டட அனுமதி பெற வேண்டும் என மெட்ரிக்
பள்ளிகளின் இயக்குனர், திருநெல்வேலி மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்
நிர்பந்திக்கக்கூடாது. வழக்கு பைசல் செய்யப்படுகிறது என்றார். மனுதாரர்
வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜரானார்.