பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதில், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் சார்பில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை, பிரதமர் மோடி, ஜூலை 1ல், டில்லியில் துவக்கி வைத்தார். நாடு முழுவதும், 4.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஏற்படுத்தவும், 18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, 'பாரத் நெட், டிஜிட்டல் லாக்கர், நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல்' ஆகிய தொழில்நுட்ப வசதிகள் துவங்கப்பட்டன. இந்தத் திட்டத்துக்கு, விளம்பரத் துாதராக ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி கிருதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென, பள்ளி மற்றும் கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை, இன வாரியான கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சிப் படிப்புக்கான உதவித்தொகை போன்ற வற்றுக்கு, டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக, புதிய தேசிய ஸ்காலர்ஷிப் இணையதளத்தில், பள்ளி, கல்லுாரிகளை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதாக, கல்வித் துறையினர் தெரிவித்தனர்.