தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அடுத்த
கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு தொடங்கப்படும்
என்று, துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில்,
சேலம் மண்டல அளவிலான அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து
கொண்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஓமலூர் அருகேயுள்ள பத்மவாணி கல்வியியல்
கல்லூரியில் நடைபெற்றது. இதில் பி.எட். படிப்பிற்கான மாணவர் சேர்க்கை
நடைமுறைகள், அதற்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, ஆராய்ச்சிப்
படிப்பில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதம்
நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 10
புதிய துறைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். 170 மாணவ, மாணவியர்கள் முனைவர் பட்ட ஆராய்ச்சிப்
படிப்பில் சேர்ந்துள்ளனர். அடுத்த கல்வியாண்டு முதல் எம்.எட்.,
ஒருங்கிணைந்த பி.எட். பட்டப்படிப்பு தொடங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டயப் படிப்புகளையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பி.எட். படிப்பில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக
பி.ஏ.பி.எட், பி.எஸ்சி. பிஎட் பயில முடியும். தற்போது தமிழ்நாடு முழுவதும்
பி.எட். பட்டப் படிப்பில் 70 ஆயிரம் மாணவர்களும், எம்.எட். படிப்பில் 4
ஆயிரம் மாணவர்களும் பயின்று வருகின்றனர் என்றார்.
நிகழ் கல்வியாண்டு முதல் பி.எட். பட்டப்
படிப்பிற்கான கால அளவை இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப் போவதாக வெளியான தகவல்
குறித்து கேட்டதற்கு, அதுகுறித்து தனியார் கல்லூரிகள் தரப்பில் சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் அளிக்கும்
வழிகாட்டுதலைத் தொடர்ந்து, பி.எட் பட்டப்படிப்பிற்கான கால அளவு
அறிவிக்கப்படும் என்றார்.