Breaking News

» இந்தியா குப்பையை வாங்கி விற்கும் மொபைல் ஆப்பை உருவாக்கி ரூ.6 லட்சம் வென்ற பெங்களூர் பள்ளி மாணவிகள்


Asiriyar Kural's photo.
பெங்களூரைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவிகள் 5 பேர் அமெரிக்காவில் நடந்த டெக்னோவேஷன் சேலஞ் 2015 தொழில்நுட்ப போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். பெங்களூரில் உள்ள நியூ ஹாரிசன் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சஞ்சனா வசந்த், அனுபமா, மஹிமா மெஹன்தலே, ஸ்வஸ்தி பி. ராவ் மற்றும் நவ்யாஸ்ரீ. 14 வயதாகும் அவர்கள் 5 பேரும் சேர்ந்து செல்லிக்ஸோ என்ற ஆன்ட்ராய்டு செல்போன் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளனர்.
அதாவது அந்த அப்ளிகேஷன் மூலம் மக்காத குப்பையை வாங்கி, விற்கலாம். செல்லிக்ஸோ என்றால் போர்ச்சுக்கீசிய மொழியில் குப்பை என்று அர்த்தம். இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த டெக்னோவேஷன் சேலஞ் 2015 தொழில்நுட்ப போட்டியில் மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு ரூ.6 லட்சத்து 34 ஆயிரத்து 296 ரொக்கம் பரிசாக கிடைத்துள்ளது. இதை வைத்து மாணவிகள் தங்கள் அப்ளிகேஷனை மேம்படுத்த உள்ளனர். சமூக பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சிறுமிகள் செல்போன் அப்ளிகேஷனை உருவாக்கி அதை அறிமுகப்படுத்துவது தான் டென்னோவேஷன் சேலஞ் போட்டி. அந்த போட்டியில் 64 நாடுகளில் இருந்து 400 அணிகள் கலந்து கொண்டன. அதில் 10 அணிகள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. செல்லிக்ஸோ பிரதமர் மோடியின் சுத்தமான இந்தியா திட்டத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. டெக்னோவேஷன் சேலஞ் என்பது உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப போட்டி ஆகும். அடோப் பவுன்டேஷன், சிஏ டெக்னாலஜீஸ், கூகுள், வெரிசான், யுனைடெட் நேஷன் விமன், யுனெஸ்கோ, எம்.ஐ.டி. மீடியா லேப் ஆதரவுடன் நடந்து வருகிறது. போட்டியில் வெற்றி பெற்று நாடு திரும்பியுள்ள மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் தலா ரூ.25 ஆயிரம் பரிசு அளித்துள்ளது. இது குறித்து பள்ளி முதல்வர் சந்தியா ராமன் கூறுகையில், எங்கள் மாணவிகள் நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளனர். இது வெறும் வெற்றி அல்ல. சிறுமிகளின் சக்தி, கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. சிறுமிகள் சுத்தமான இந்தியா திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்