பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் அனைத்து பிரிவுகளிலும் கடினமாககேள்விகள் கேட்கப்பட்டதால் உயிரியல் தேர்வில் 200 மதிப்பெண் எடுப்பது சிரமம்' என மாணவர்கள் தெரிவித்தனர்.
உயிரியல் தேர்வு குறித்து அவர்கள் கூறியதாவது:
ஆர்.ஹரிஹரன் (கே.வி.எஸ்., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்): விலங்கியலில் ஒன்று, மூன்று, ஐந்து, 10 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன. புத்தக பின்பக்க கேள்விகள் சில கேட்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கேள்விகளுக்கு நீண்ட நேரம் யோசித்தே பதிலளிக்க வேண்டியது இருந்ததால் நேரம்முடிந்துவிடுமோ என்ற டென்ஷன் ஏற்பட்டது. ஐந்து மதிப்பெண் வினாவில் (கட்டாயமாக பதிலளிக்க வேண்டியது-வினா 31) 'நோய் தடை காப்பியல்' பாடத்தில் இருந்து முதல் முறையாக கேட்கப்பட்டிருந்தது. எதிர்பாராத கேள்விகளே இடம் பெற்றிருந்தன. உயிரியலில் 200க்கு 200 எடுப்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் மருத்துவ 'கட் ஆப்' பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது.எம்.பவித்ரா (எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்): விலங்கியல் பகுதி கஷ்டமாகவும், தாவரவியல் பகுதி எளிதாகவும் இருந்தது. எதிர்பாராத கேள்விகள் விலங்கியலில் இருந்தன. தாவரவியலில் முதல்பாடத்தை நன்றாக படித்திருந்தால் அதிகமதிப்பெண் பெறலாம். அதில் இருந்து மூன்று, ஐந்து மற்றும் 10 மதிப்பெண் வினாக்கள் வந்திருந்தன. பாடத்தின் உள்ளே இருந்து நுணுக்கமாக கேள்விகள் எடுக்கப்பட்டு இருந்தன.
வி.மகாராணி (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல்): தாவரவியல் கேள்விகள் மிக எளிதாக இருந்தன. விலங்கியல் பாடத்தில் மூன்று மதிப்பெண் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் கேள்விகள் கடினமாக இருந்தன. முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் எதுவும் திரும்ப கேட்கப்படவில்லை. புத்தகத்தில் இருந்து நேரடியாக கேள்விகள் கேட்கப்படாததால் பதில் அளிப்பதில் சிரமம் இருந்தது.
எம்.சாரதா (ஆசிரியை, சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்):
விலங்கியல் புத்தகத்தை முழுமையாக படித்திருந்தாலும் எளிதில் விடையளிக்க முடியாத அளவு அனைத்து பிரிவு கேள்விகளும் கடினமாக இருந்தன. 'வீக்' மாணவர்கள் தேர்ச்சி பெற சில குறிப்பிட்ட பாடங்களை நன்கு படிக்க வலியுறுத்தினோம். ஆனால் வழக்கமாக அப்பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் இந்த ஆண்டு இல்லை. தேர்வு முடிந்தபின் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடையை நீண்ட நேரம் தேடிய பின்னரே கண்டுபிடிக்க முடிந்தது.கட்டாயமாக விடையளிக்க வேண்டிய வினாக்களும் கடினம் தான். இதற்கு சற்று ஆறுதல் தரும் விதமாக தாவரவியலில் அனைத்துப்பிரிவு வினாக்களும் ஏற்கனவே கேட்கப்பட்டவையாக, எளிதாக இருந்தன. விலங்கியல் வினாக்கள் கடுமை காரணமாக உயிரியலில் 200க்கு 200 மதிப்பெண் எடுப்பது சவால்.