சென்னை, ஏப்.29-ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு எந்த வித சுற்றறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் உறவில் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்க இந்த கல்வியாண்டு முதல் ஆசிரியைகள் தங்களின் சேலைக்கு மேல் ‘கோட்’ அணியவேண்டும் என்றும், இந்த உத்தரவு ஆசிரியர்களின் கருத்துகளின் பேரில் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. மேலும், இதற்கான முறையான சுற்றறிக்கை பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவலை பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது. ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு தொடர்பாக எந்த வித உத்தரவும் அரசிடம் இருந்து பிறப்பிக்கப்படவில்லை என்றும் இதுதொடர்பாக எந்த சுற்றறிக்கையும் இதுவரை அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியதாவது:-
பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியைகள் தாங்கள் அணியும் சேலைக்கு மேல் அங்கி அதாவது வக்கீல் கோட் போல அணிந்துகொண்டு தான் வர வேண்டும். இளவயது ஆசிரியர்கள் ஜீன்ஸ் பேண்ட் போடக்கூடாது என்பது உள்பட ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. ஆனால் இது முற்றிலும் தவறானது.
ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து எந்தவித உத்தரவும் அரசு பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற உடை கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து எந்தவித கருத்துக்கேட்பும் நடைபெறுவதாக அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படவும் இல்லை.
தற்போது வரை அதுபோன்ற அறிவிப்புகள் இல்லை.
தேர்வுகள் முடிவடைந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. முதல் நாளிலேயே பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை அனைத்து மாணவ-மாணவியருக்கும் வழங்கிட தேவையான எல்லா நடவடிக்கைகளும் தீவிரமாக வகுக்கப்பட்டு வருகிறது.
பாட புத்தகங்களுடனே ‘அட்லஸ்’ உலக வரைபடமும் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் கணக்கிடப்பட்டு அச்சிடப்பட்டு வருகிறது. மே 20-ந்தேதியில் இருந்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வசம் தேவையான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு விடும். தொடர்ந்து, பள்ளி திறக்கும் முதல் நாளன்று தங்கு தடையின்றி அந்தந்த பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படும். எனவே ஜூன் 1-ந்தேதி முன்பாகவே பாடபுத்தகங்கள், சீருடைகள் தயார் நிலையில் இருக்கும்.
முக்கியமாக மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டிய விலையில்லா சீருடைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக உடல் வடிவம், அளவு மற்றும் படிக்கும் வகுப்புகளுக்கு ஏற்ப 6 வித வெவ்வேறு அளவுகளில் சீருடைகள் தைக்கப்பட்டு வருகிறது. இதன் 60 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது.
இந்த சீருடைகளும் பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்களுக்கு (ஒருவருக்கு 2 செட் வீதம்) வழங்கப்படும். எனவே நோட்டுகள், புத்தகங்கள், ‘அட்லஸ்’ ஆகியவற்றோடு சீருடைகளையும் அன்றைய தினம் மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான ஆயத்த பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.