அங்கீகாரம் பெற்ற மற்றும் பெறாத பள்ளிகள் குறித்து அடையாளம் காண்பிக்கும் நோக்கில், 2011ல் பிரத்யேகமாக துவக்கப்பட்ட இணையதளம் வடிவமைப்பு திட்டம், செயல்படுத்தபடாமல் முடங்கியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. குறைந்தது நான்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து, மொத்தம் 15 (ஐ.எம்.எஸ்.,) மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உள்ளனர். பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் இதர விவரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தை புதுப்பித்துக்கொள்வது அவசியம்.தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் குறித்து, ஆண்டுதோறும் பெற்றோருக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆய்வகம், விளையாட்டு மைதானம், நூலகம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலேயே, சில பள்ளிகள் பாதுகாப்பற்ற முறையில் செயல்படுகின்றன.
இப்பள்ளிகளை, நிரந்தரமாக செயல்படாமல் தவிர்க்கவும், பெற்றோர்களுக்கு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை அடையாளம் காண்பிக்கவும் கடந்த 2011ம் ஆண்டு, t:matric.com என்ற இணையதளம் வடிவமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு முதல்கட்ட பணிகள் துவங்கப்பட்டது.
இதுவரை, இணையதளம் பயன்பாட்டுக்கு வரவில்லை. சமீபத்தில், பன்னிமடை பகுதியில், அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட தனியார் பள்ளி எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல், பள்ளியை மூடியதால், மாணவர்களும், பெற்றோர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
உதாரணமாக, நடப்புகல்வியாண்டு துவக்கத்தில், கோவையில், 319 பள்ளிகளுக்கு அங்கீகாரம் சார்ந்த பிரச்னையில் முதற்கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, இதுவரை அப்பள்ளிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்படவில்லை.
தனியார் பள்ளி பெற்றோர் நலச்சங்க தலைவர் மதுமோகன் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் இறுதியில்தான் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் சார்ந்த தகவல்கள் வெளியாகிறது. இதற்கு முன்பே, 99 சதவீத பள்ளிகளில் அட்மிஷன் முடிந்துவிடுகிறது. பண இழப்புடன் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. இதற்கு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
சமூக ஆர்வலர் மற்றும் வக்கீல் அசோக் கூறுகையில், "2011ம் ஆண்டு t:matric.com என்ற இணையதளம் துவங்கப்பட்டது. பள்ளிகளுக்கு தனித்தனியே வரிசை எண்களும் வழங்கப்பட்டன. புதிய பள்ளிகள் அங்கீகாரம் பெற, ஆன்லைனில் பதிவுசெய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், முறையாக நடைமுறைப்படுத்தாமல் விட்டதால், செயல்பாட்டிற்கு வராமல் பயனின்றி போனது. இத்திட்டத்தை, உடனடியாக செயல்படுத்த வேண்டும்" என்றார்.