ஊதிய உயர்வு உட்பட 34 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 3வது
நாளான நேற்று மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். தூத்துக்குடியில்,
பெரியார் சிலை அருகே சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை
போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது, போலீசாருக்கும்
அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து மறியலில்
ஈடுபட்ட பெண்களை சேலை மற்றும் தலை முடியை பிடித்து இழுத்ததுடன்,
குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். இதில், பெண் ஊழியர்களின்
பலரது ஆடைகள் கிழிந்தன. சாலையில் ஏராளமான செருப்புகள், டிபன் பாக்ஸ்கள்
சிதறிக் கிடந்தன. அப்பகுதியே போர்க்களம்போல் காட்சி அளித்தது.
மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே ஊரக வளர்ச்சித்துறைஅலுவலக வளாகத்தில் காலை 11 மணிக்கு 500க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் திரண்டனர்.
அங்கிருந்துபுறப்பட்டு அண்ணா பஸ் ஸ்டாண்ட்
ரோட்டில் மறியல் செய்ய தயாராகினர். ஆனால்,போலீசார் கயிற்றை கட்டி
ரோட்டுக்கு வரவிடாமல் தடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும்
கடுமையானதள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தள்ளிய வேகத்தை தாங்கமுடியாமல்
பெண் ஊழியர்கள் பலர் கீழே விழுந்து மயங்கினர். சங்க மாநில செயலாளர்
நூர்ஜகான் காயமடைந்து மயங்கினார்.மாநில செயற்குழு உறுப்பினர் அமுதா
போலீசாரின் பூட்ஸ் கால்மிதியில் சிக்கி படுகாயமடைந்தார். நிர்வாகி
பாண்டியம்மாள் காயமடைந்தார். 3 பேரும் மதுரை அரசுமருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறியலில் 500 பெண் ஊழியர்களையும் போலீசார் கைது
செய்து வேனில் ஏற்றி சென்றனர். திண்டுக்கல்லில் நடந்த மறியலின் போதுபெண்கள்
7 பேர் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும்
நடந்த மறியல் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.