Breaking News

பிறப்பு, இறப்பு பதிவுக்கும் 'ஆதார்' எண் அவசியம்!

போலி சான்றிதழ்களை தடுக்க, பிறப்பு, இறப்பு பதிவுக்கும், 'ஆதார் எண்' அவசியம் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த, ஜன., 1ம் தேதி முதல், நாடு முழுவதும், பிறப்பு, இறப்புகள் அனைத்தும், 'ஆன்லைனில்' பதிவு செய்யப்படுகிறது. இதற்காக, மத்திய சுகாதாரத் துறை, 'சிவில் ரிஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் சாப்ட்வேர்' தயாரித்துள்ளது.


இந்த, 'சாப்ட்வேர்,' பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர்களான, மாநகராட்சி, நகராட்சி சுகாதார ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், சுகாதாரத் துறை ஆய்வாளர் ஆகியோரின் கம்ப்யூட்டர் மற்றும் 'லேப் - டாப்'களில் ஏற்றப்பட்டு உள்ளன. அனைவருக்கும், தனித்தனியாக, ஐ.டி., மற்றும் 'பாஸ்வேர்டு' வழங்கப்பட்டுள்ளன. போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதை தடுக்க, பிறப்பு, இறப்புடன், 'ஆதார்' எண்ணையும் சேர்த்து பதிவு செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிறப்பை பதியும்போது, பெற்றோரின், 'ஆதார்' எண்ணும், இறப்பை பதியும்போது, இறந்தோரின், 'ஆதார்' எண்ணும் பதிவு செய்ய வேண்டும். இதற்கான பயிற்சியை, பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர்களுக்கு, சுகாதாரத் துறை அளிக்கிறது.