Breaking News

விபத்தில் சிக்கும் மாணவர்களை காக்க ரத்த பிரிவுடன் பஸ் பாஸ்,ஐ.டி., கார்டு

அரசு பள்ளிகள் மாணவ, மாணவியரின், 'பஸ் பாஸ்'களில் ரத்தப் பிரிவைக் குறிப்பிடும் திட்டம், வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது. வாகன மற்றும் பள்ளி விபத்துகளில் சிக்கும் மாணவர்களுக்கு உடனடி சிகிச்சை தரும் வகையில், இத்திட்டம் அமலாகிறது.

பள்ளி வாகனங்களில் விபத்து, சுவர் இடிந்து விபத்து, மாணவர்களிடையே பஸ்களில் மோதல், பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் விபத்து ஏற்பட்டு பலி மற்றும் காயம் என, எதிர்பாராத சம்பவங்கள் அதிகரித்துள்ளன. விபத்துகளில் மாணவ,மாணவியர் காயமடையும்போது, ரத்தப் பிரிவு தெரியாமல், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தாமதமாகிறது. இதனால், பல நேரங்களில் மாணவ, மாணவியரின் உயிரிழப்பைத் தடுக்க முடியவில்லை என, கல்வித் துறை அதிகாரிகளிடம், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த சில வாரங்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சுவர் இடிந்து, மாணவர்கள் பலியாகும் விபத்துகளும் அதிகரித்து உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு கல்வித்துறை அதிகாரிகள், மருத்துவத் துறையினருடன் ஆலோசனை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, புதிய திட்டங்கள் கொண்டு வர உள்ளனர். முதற்கட்டமாக, அரசு தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை, மாணவ, மாணவியரின் ரத்தப் பிரிவைக் கண்டறிந்து, அதை, பள்ளியின் ஆவணங்கள், 'ஐ.டி., கார்டு, பஸ் பாஸ்' போன்றவற்றில் குறிப்பிட, முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வரும் கல்வியாண்டில் எந்தெந்த மாணவ, மாணவியருக்கு, 'பஸ் பாஸ்' வேண்டும்; அவர்களின் பெயர், விவரம், வகுப்பு; பள்ளியின் பெயர்; பஸ்சில் ஏறும், இறங்கும் இடம், அந்தப் பாதையில் வரும் பஸ்களின் தடம் எண் போன்ற விவரங்களை, ஆன்-லைன் பதிவேட்டில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. இத்துடன் மாணவ, மாணவியரை பள்ளிக்கு வரவழைத்து, ரத்தப் பரிசோதனை நடத்தி, அவர்களின் ரத்தப் பிரிவைக் கண்டறிந்து, அதையும் ஆன்-லைனில்மாணவர் விவரங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணிகளை, வரும், 28ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரத்தப் பிரிவுடன் கூடிய விவரங்களை போக்குவரத்துத் துறைக்கு அனுப்பி, பள்ளி திறக்கும் ஜூன், 1ம் தேதி, மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன் கூடிய, 'பஸ் பாஸ்' அடையாள அட்டை வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பின், பள்ளிகளில் வழங்கப்படும் ஐ.டி., கார்டிலும், பாடப்புத்தகம், வருகைப் பதிவேடு ஆகியவற்றிலும் மாணவ, மாணவியரின் ரத்தப்பிரிவு குறித்து வைக்கப்படும்.
இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.