Breaking News

'ஆசிரியை ஓட்டம் என எழுதாதீர்': கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!


கடந்த ஒரு வாரமாக தொலைக்காட்சி, செய்தித்தாள், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று எதை எடுத்தாலும், 'ஆசிரியை மாணவனோடு ஓட்டம்' என்ற செய்திதான் முன் வந்து நிற்கிறது. இந்த செய்தியை படித்தவர்கள், ஷேர் செய்கிறார்கள். ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது கூட அதிகம் விவாதித்தது, ஆசிரியை மாணவனோடு ஓட்டம் என்ற செய்தியைத்தான். இந்நிலையில், வெறும் மீடியா பசிக்காக சமூகத்தை சீரழிக்காதீர்கள் என்று குரல் கொடுக்கிறார்கள் கல்வியாளர்கள்.

''எல்லா காலக்கட்டத்திலும் இதுபோல நடந்திருக்கிறது. ஒரு மனிதன் தனிமையை உணரும் போது எதாவது ஒரு தேவை அவனுக்கு இருக்கலாம். அந்த தேவையை ஒட்டித்தான் எந்த முடிவுக்கும் அவன் போறான். அதேபோல், அந்த ஆசிரியைக்கு எந்த மாதிரியான சூழல் இருந்தது என்பது முக்கியம்.
இப்போதைய பிரச்னை என்னவென்றால், இது மாதிரியான நடவடிக்கைகளை நிர்வாகம் கண்காணிக்கிறதா..? என்பதுதான். அந்த பள்ளியின் தலைமையாசிரியரோ அல்லது சக ஆசிரியர்களோ அந்த ஆசிரியை அப்படி இருப்பதை கண்டுபிடித்து அவருக்கு கவுன்சிலிங் கொடுத்திருக்க வேண்டும். ஒரு ஆசிரியையின் நடவடிக்கை ஒழுங்காக இல்லை என்று நாம் உணர்ந்தால் உடனடியாக அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். அதை யார் செய்யணும்..? அந்த ஆசிரியருக்கோ, மாணவருக்கோ அருகில் இருப்பவர்கள்தான்.

தற்போது ஓடிப்போன ஆசிரியரும், மாணவரும் கிட்டதட்ட ஒரு வருஷமாவே இப்படி பழக்கத்துல இருந்தது எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு. அப்போ ஒரு ஆசிரியைக்கும், மாணவனுக்கும் உள்ள உறவு என்ன என்பதை அந்த இடத்தில் தெளிவுபடுத்தாததால்தான் இப்படியான சூழல் உருவாகியிருக்கிறது.

ஒரு பாத்ரூமில் இருந்து இரண்டு பேரும் வெளிய வந்திருக்காங்க. அப்போது, கையும் களவுமாக மாட்டியிருக்காங்க. அப்ப ரெண்டு பேருக்குமே அது அவமானம். அப்ப அந்த அவமானத்தை உணர வைத்திருந்தால், அவுங்க திருந்தியிருப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கும். அதற்கு, மாறாக அந்த ஆசிரியையை கூப்பிட்டு டிஸ்மிஸ் பண்ணியிருக்காங்க. மாணவனின் பெற்றோரையும் அழைத்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி அவனை படிக்க வச்சிருக்காங்க.

ஸ்கூல் முழுக்க ஆசிரியை டிஸ்மிஸ் ஆன விஷயம் தெரிஞ்ச பிறகு எந்த மனநிலையில அந்த மாணவன் அங்க படிப்பான். அதேநேரத்தில், ரெண்டு பேராலயுமே அந்த இடத்துல அவமானத்தை தாங்க முடியல. எனவே இங்க மானத்தோடு வாழ முடியாதுனு ரெண்டு பேரும் போயிருப்பாங்க. மற்றபடி, திருமணம் செய்து கொண்டோ, திருமணம் செய்வதற்காகவோ ஓடியிருக்க மாட்டாங்க. அவங்களுக்கு இந்த சூழலை ஏற்படுத்தி கொடுத்ததே இந்த சமூகம்தான்'' என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

சமூக ஆய்வாளரான முத்துகிருஷ்ணன் “நம்முடைய கல்வி முறை, குடும்ப முறைகளில் நிறைய இடைவெளிகள் இருக்கிறது. பல விஷயங்களை நாம் வெளிப்படையாக பேசிக்கிறது இல்லை. வெளிப்படையாக பேச மறுக்கிற எல்லா விஷயங்களுக்குள் எல்லாவற்றிலும் அவரவர்களுடைய மதிப்பீடு போய் உட்கார்ந்து கொள்கிறது. அது காதலாக இருக்கலாம், காமமாக இருக்கலாம். பதின் பருவத்தில் ஏற்படுகிற எந்த பிரச்னைகளை பற்றி நம்ம சமூகமும் சரி, பாடத்திட்டங்களும் சரி பேசுறதே இல்லை.

அதனால், அவர்கள் பார்க்கிற சினிமாதான் கல்லூரி, பள்ளிகள் அளவிலான காதலுக்கும், போதைக்கும் நேரடியான காரணியாக இருக்கிறது. சினிமாவில் முன்வைக்க கூடிய ரோல் மாடல் அத்தனையுமே, பதின் பருவத்தில் ஈர்க்கப்பட்டு, அது போகிற திசையில் போவதுதான் இளைமை என்று முன்வைக்கப்படுகிறது. இளமையென்றால் எதைப்பற்றியும் யோசிப்பது கிடையாது. தோன்றுவதை அப்படியே செய்வதுதான் இளமை என்று சொல்லிக்கொடுக்கிறது சினிமா.

இன்றைக்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பதின்பருவத்தில் ஏற்படுகிற உடலியல் மாற்றங்கள், மனதில் ஏற்படுகிற மாற்றங்கள் முதல், காதல், காமம் என எல்லாவற்றுக்கும் முழுமையான புத்தகங்கள் வந்துடுச்சி. ஆனா, நம்ம நாட்டுல பல விஷயங்களை சமூகத்துல பேசுறதே கிடையாது.
முன்பெல்லாம், விலங்கியல் ஆசிரியை குறிப்பிட்ட பாடத்தை அப்படியே ஸ்கிப் பண்ணிடுவாங்க. இந்த அளவிலான தயக்கமும் கூச்சமும் நமக்கு இருந்தது. இன்றைக்கு இளைஞர்கள் காஃபி ஷாப்களுக்கு ஜோடியோடு சென்றால்தான் ஒரு நவீனமான இளைஞராக இருக்க முடியும்னு ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

மேலும், இன்றைக்கு படித்து முழுமையாக தகுதி பெற்றவர்களை அரசாங்கம் ஆசிரியர்களாக நியமிக்குது. ஆனால், தனியாரில் அப்படியில்லை. தனியார்ல முதல் பேட்ஜ்ல படிச்சு முடிச்ச பெண்ணை அடுத்த செட்டுக்கு ஸ்டாஃபாக நியமிக்கிறார்கள். அவர்களுக்கும், அங்கு படிக்கும் மாணவர்களுக்கும் என்ன வயசு வித்தியாசம் இருக்கும். விஞ்ஞான ரீதியாக பார்த்தால் அவுங்கெளெல்லாம் ஒத்தவயசு உள்ளவங்க.

இன்னொன்னு வயதில் மூத்தவங்களை கல்யாணம் பண்றது என்பது சுனில் தத்ல இருந்து டெண்டுல்கர் வரை நூறு உதாரணம் சொல்லலாம். இது மிகப்பெரிய தவறு ஒன்றும் இல்லை. இதை பெரிய ஒழுக்கக்கேடாக சித்தரிக்க மீடியா முயலுகிறது. ஓடிபோற விஷயங்களில் எல்லாம் பெண்தான் குற்றவாளியாக பார்க்கப்படுகிறார். ஒரு விடுதியில் பத்து அழகிகள் பிடிபட்டார்கள்னு படிப்போம். என்றைக்குமே விபச்சாரம் செய்துகிட்டு இருந்த ஆண்கள் கைது செய்யப்படுறது இல்லை. பெண்ணை அடக்கி ஆள வேண்டுமென்று நினைக்கிற இந்த ஆணாதிக்க சமூகம் பெண்ணை குற்றவாளி கூண்டில் ஏற்ற நினைக்கிறது.

இந்த சம்பவத்தின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயப் பெண்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறார்கள். இதைப் படிக்கிற ஒவ்வொரு ஆணும் தன் மனைவியின் மீது, தங்கையின் மீது ஒரு புது விதிமுறைகளை விதிப்பார்கள். இதுமாதிரியான சம்பவங்களை ஊடகங்கள் பொறுப்போடு கையாளவில்லையென்றால் அது மேலும் பெண்களுக்கு எதிராக முடியும்'' என்றார்.
''பத்திரிகைகளில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றால் வெறும் செய்தியை மட்டும் வெளியிடலாம், எதற்கு புகைப்படத்தை போடுகிறார்கள்..? ஓட்டம்னு எழுதிறாங்க அதுவே முதல்ல தவறு. அவர்கள் இருவரும் விருப்பப்பட்ருக்காங்க. அதனால போயிருக்காங்க. இதுல எங்கிருந்து வந்துச்சி ஓட்டம்.

80களில் இருந்த ஆசிரியர்கள் மனநிலைமையும், மாணவர்களின் மனநிலையும் வேறு. இப்போது இருப்போர்களின் மனநிலை வேறு. முன்பெல்லாம் ஆசிரியர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வு இருந்தது. ஆனால் இன்றைக்கு அப்படியில்லை. ஆசிரியர் பணி நியமனத்திற்கு 3 லட்சம் கொடுத்து வேலைக்கு சேறுகிறார்கள், பணிமாறுதலுக்கு 2 லட்சம் கொடுக்கிறார்கள். அப்படி பணத்தை கொடுத்துவிட்டு பணிக்கு வரும் போது குறுக்கு வழியில போறதுக்கோ அல்லது குறுக்கு வழியில பணம் சம்பாதிப்பதற்கோ அவர்கள் தூண்டப்படுகிறார்கள்.

ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி பாடத்திலயே ஒரு ஆசிரியர் எது செய்ய வேண்டும். எதை செய்யக்கூடாது என்று இருக்கும். அதேபோல எப்படி மாணவர்களை அணுக வேண்டும் என்றும் நிறை விஷயங்கள் இருக்கிறது. ஒரு நல்ல மாணவனை உருவாக்கக் கூடிய பொறுப்பும், கடைமையும் உள்ளவர்கள் ஆசிரியர்கள்தான் என்பதால் முதலில் ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு வாழ்வியல் கல்வியை சொல்லித்தர வேண்டியதும் மிக முக்கியமான ஒன்று'' என்கிறார் சேலத்தைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவர்.