Breaking News

மாணவர்கள் கண்முன்னே பள்ளி தலைமையாசிரியர் தாக்குதல்

அவிநாசியில் உள்ள துவக்கப்பள்ளியில், மாணவர்கள் முன், பள்ளி தலைமையாசிரியரை ஆளுங்கட்சி பெண் கவுன்சிலரின் கணவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சி, 17வது வார்டு, கைகாட்டிபுதுாரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 59 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளி அருகே வசிப்பவர்கள்பள்ளி வளாகத்துக்குள் குப்பையை கொட்டுகின்றனர் என்ற புகார் நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது.


இது தொடர்பாக, அந்த வார்டு ஆளுங்கட்சி கவுன்சிலர் ரமணியின் கணவர் துரைசாமிக்கும், பெற்றோருக்கும் இடையே, நேற்று முன்தினம் மாலை பள்ளி வளாகத்தில் காரசார விவாதம் நடந்தது அப்போது, தலைமையாசிரியர் செந்தாமரைக்கண்ணன் குறுக்கிட்டு பேசினார். ஒரு கட்டத்தில், தலைமையாசிரியரின் கழுத்தை பிடித்து இறுக்கி, துரைசாமி தள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது:

பள்ளியை ஒட்டி வசிப்பவர்கள், குப்பை மற்றும் கழிவு நீரை பள்ளி வளாகத்துக்குள் கொட்டுகின்றனர். இதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த பாஸ்கர் என்பவர் பள்ளிக்குள் புகுந்து, ஏழு மாணவர்களை தாக்கியுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி சமாதானம் செய்தனர்.இப்பிரச்னையில் தலையிட்ட வார்டு கவுன்சிலரின் கணவர் துரைசாமி, விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, என் கழுத்தை பிடித்து இறுக்கினார். இவ்வாறு அவர் கூறினார்.