Breaking News

ஆப்சென்ட்' ஆனவர்கள் தேர்வில் 'பாஸ்--- அதிர்ச்சிி

 


மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்கல்வியில் 858 மாணவர்கள் பெயரில் போலி 'டிடி'யை பெற்று சான்றிதழ் வழங்கியது, தேர்ச்சி அடையாத, தேர்வுக்கு வராத மாணவர்களை 'பாஸ்' செய்தது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் உட்பட 8 பேர் மீது லஞ்சஒழிப்பு போலீசார் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இப்பல்கலை தொலைநிலைக்கல்வியின்கீழ் வெளிமாநிலங்களில் 133 மையங்கள் உள்ளன. 1.20 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மையங்களை பல்கலை கட்டுப்பாட்டில் தனியார் பராமரிக்கின்றனர். கேரள மாநிலம் கொல்லம் மையத்தை ப்யூச்சர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிர்வாகி ஜிஜி, மலப்புரத்தில் அப்துல் அஜீஸ், சுரேஷ், திருச்சூரில் ஜெயபிரகாசம் கவனித்து வந்தனர்.2017-18ம் கல்வியாண்டில் பி.காம்., படிக்க தொலைநிலைக்கல்வியில் சேர 16,580 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 858 பேர்களில் போலி வரவோலையை('டிடி') தயாரித்து பல்கலையிடம் மைய பொறுப்பாளர்கள் கொடுத்துள்ளனர்.

34 மாணவர்கள் பதிவுக்கட்டணம் செலுத்தாத நிலையில் 29 பேருக்கு மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டது. தேர்வில் தேர்ச்சி அடையாத, தேர்வுக்கு வராத 4 பேருக்கு 'பாஸ்' ஆனதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. பல்கலையில் மதிப்பெண் பட்டியல் வேறாகவும், மாணவர்களுக்கு வழங்கிய சான்றிதழில் வேறாகவும் இருந்தது. இதனால் மொத்தம் ரூ.2 லட்சம் வரை பல்கலைக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டது.இதுகுறித்து லஞ்சஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றன. 2019 முதல் இந்த முறைகேடு குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இரு ஆண்டுகளுக்கு முன் பல்கலை கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், சான்றிதழ்களை தயார் செய்து கொடுக்கும் தரவாக்கம் பிரிவு(இ.டி.பி.,) கண்காணிப்பளர் சத்தியமூர்த்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இ.டி.பி., கம்ப்யூட்டர் புரோகிராமர் கார்த்திகை செல்வன், இளங்கலை தேர்வு பாடப்பிரிவு கண்காணிப்பாளர் ராஜபாண்டி ஆகியோரின் பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

வழக்குப்பதிவு

இந்நிலையில் முறைகேடுகள் உறுதியானதை தொடர்ந்து மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல் உட்பட 8 பிரிவுகளின்கீழ் ராஜராஜன், சத்தியமூர்த்தி, கார்த்திகை செல்வன், ராஜபாண்டி, மைய பொறுப்பாளர்கள் ஜிஜி, அப்துல் அஜீஸ், சுரேஷ், ஜெயபிரகாசம் ஆகியோர் மீது மதுரை லஞ்சஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் குமரகுரு வழக்குப்பதிவு செய்தார். நேற்றுமுன்தினம் மதுரையில் சத்தியமூர்த்தி உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை. முதல் குற்றவாளியான ராஜராஜன் கடந்தாண்டு ஆக., 22ல் இறந்துவிட்டார். இவ்வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.